மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை பிப்ரவரியில் 2-வது முறையாக உயர்வு; இன்று முதல் புதிய விலை: ராகுல் காந்தி கண்டனம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலையை இந்த மாதத்தில் 2-வது முறையாக உயர்த்தி பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நேற்று அறிவித்துள்ளன. இந்தப் புதிய விலை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடையுள்ள மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1-ம் தேதி ரூ.25 உயர்த்தப்பட்ட நிலையில், 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 75 ரூபாய் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 4-வது முறையாக மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படுகிறது. இதன்படி, டெல்லியில் மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை ரூ.769 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி சிலிண்டர் ஒன்றுக்கு 50 ரூபாயும், அந்த மாதம் 15-ம் தேதி மீண்டும் 50 ரூபாயும் உயர்த்தப்பட்டது. இதனால் ரூ.644 ஆக இருந்த சிலிண்டர் விலை அந்த மாத முடிவில் ரூ.694 ஆக அதிகரித்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து சமையல் சிலிண்டர் விலை மாற்றமில்லாமல் ரூ.594 விலையில் நீடித்து வந்தது. மானியத்துடன் வழங்கப்படும் சிலிண்டரும் இதே விலையில்தான் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து, சமையல் சிலிண்டர் மானியம் பெறும் மக்களுக்கும் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணத்தை மத்திய அரசு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்ட ட்வீட்டில், “இருவரின் வளர்ச்சிக்காக மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், சமையல் சிலிண்டர் விலை குறித்த செய்தியின் இணைப்பையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விலையும் தொடர்ந்து 6-வது நாளாக இன்று அதிகரித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 29 பைசாவும், டீசல் லிட்டருக்கு 32 பைசாவும் உயர்ந்துள்ளது. இதன் மூலம் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.73 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.79.06 பைசாவாகவும் அதிகரித்துள்ளது. மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ.95.21 பைசாவாகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.86.04 பைசாவாகவும் அதிகரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in