Last Updated : 15 Feb, 2021 08:12 AM

 

Published : 15 Feb 2021 08:12 AM
Last Updated : 15 Feb 2021 08:12 AM

அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால் என்ன செய்வது? புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

அலுவலகங்களில் பணியாற்றுவோருக்கு ஒருசிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டால், அவர்கள் பணியாற்றும் இடத்தையும், கடந்த 48 மணிநேரத்தில் அவர் சென்ற இடங்களையும் மட்டும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தால் போதுமானது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு சில மணிநேரத்துக்குப்பின் மீண்டும் பணிகளை, முறையான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தொடரலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகதாாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது:

அலுவலகங்களில் பணியாற்றும் சிலருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் பணியாற்றிய இடம், கடந்த 48 மணிநேரத்தில் அவர்கள் சென்றுவந்த இடங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்க வேண்டும். அதன்பின் சில மணிநேரத்துக்குப்பின் மீண்டும் பணிகளைத் தொடரலாம்.

அதிகமான எண்ணிக்கையில் ஊழியர்களுக்கு கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தால், ஒட்டுமொத்த அலுவலகத்தையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தபின், பணிகளைத் தொடங்கலாம்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்து யாரேனும் ஊழியர்கள் பணிக்கு வந்தால், அந்த ஊழியர் வசிக்கும் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதி இல்லை என்ற அறிவிப்பு வரும்வரை அந்த ஊழியரை பணிக்கு வருவதற்கு உயர் அதிகாரி அனுமதிக்க கூடாது. அந்த ஊழியரை வீட்டில் இருந்தவாரே பணியாற்ற அனுமதிக்கலாம்.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகில் இருக்கும் மருத்துவமனை மற்றும் அத்தியாவசியப் பணி அலுவலகங்கள் தவிர மற்ற அலுவலகங்கள் மூடப்பட வேண்டும். கட்டுப்படுத்தப்பகுதிக்கு வெளியே இருக்கும் அலுவலகங்களைத் திறக்கத் தடையில்லை.

கரோனா அறிகுறி இல்லாத ஊழியர்கள், பார்வையாளர்கள் மட்டுமே அலுவலகத்துக்குள் வர அனுமதிக்க வேண்டும். தனிநபர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 6 அடி சமூக விலகலைக் கடைபிடிக்க வேண்டும்.

முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். மூக்குப்பகுதி, வாய் பகுதியை கண்டிப்பாக முகக்கவசம் மூடியிருக்க வேண்டும். முகக்கவசத்தின் முன்பகுதியை தேவையில்லாமல் தொடக்கூடாது.

குறிப்பிட்ட இடைவெளியில் ஊழியர்கள் கைகளைக் கழுவ வேண்டும். சோப்பு மூலம் 40 வினாடிகள் முதல் ஒருநிமிடம் வரை கைகளைக் கழுவ வேண்டும். ஆல்கஹால் கலந்த சானிடைசர் இருந்தால் அதன் மூலம் கைகளை 20 வினாடிகள் வரை தேய்க வேண்டும்.

அலுவலகங்கள் சார்ந்த கூட்டங்கள், ஆலோசனைகள் பெரும்பாலும் நேரடியாக அல்லாமல் காணொலி மூலமே நடத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மூடப்பட்ட அறைகள், காரிடர்கள், படிக்கட்டுகள், கேண்டீன், கூட்ட அரங்கு ஆகியவற்றில் கரோனா தொற்று வேகமாகப் பரவும் என்பதால் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்.

அனைத்து அலுவலக நுழைவாயில்களிலும் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசர் வைத்திருக்க வேண்டும், தெர்மல் ஸ்கேனிங் செய்தல் கட்டாயமாகும். பணிபுரியும் இடங்களை இரு நாட்களுக்கு ஒருமுறை அல்லது சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

ஏசி அறையில் பணியாற்றுவோர் குளிர்சாதன வசதிகளில் குறைந்தபட்சம் 24 டிகிரி செல்சியஸ் குறைவில்லாமலும், காற்றில் ஈரப்படும் 40 முதல் 70 வரை இருக்கவேண்டும்.

ஊழியர்கள், பொதுமக்கள் அடிக்கடி தொடும் பகுதிகள், கதவு கைப்பிடிகள், அமரும் இடங்கள், கழிவறைகள் போன்றவற்றை ஒரு பங்கு சோடியம் ஹைபோகுளோரைடு கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x