

ஒடிசாவை சேர்ந்த மருத்துவர் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஏழைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
மேற்கு ஒடிசாவின், சம்பல்பூர் மாவட்டம், புர்லா பகுதியில் 'வீர் சுரேந்திர சாய் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச்' என்ற பெயரில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு சங்கர் ராம் சந்தனி (38) என்பவர் துணை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
கடந்த 12-ம் தேதி புர்லாபகுதியில் அவர் தனியாக மருத்துவமனையை தொடங்கினார். அவரிடம் சிகிச்சை பெற வரும் மக்களிடம் ஒரு ரூபாயை மட்டுமே கட்டணமாகப் பெறுகிறார். சிலரிடம் ஒரு ரூபாயைகூட பெறாமல் இலவசமாக சிகிச்சை அளிக்கிறார்.
இதுகுறித்து சங்கர் ராம்சந்தனி கூறியதாவது:
நான் மருத்துவரானால் ஏழைகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது எனது தாயாரின் விருப்பம். புர்லா மருத்துவக் கல்லூரியில் பணியில் சேர்ந்தபோது 'சீனியர் ரெசிரெண்ட்' ஆக பணி வழங்கப்பட்டது. இந்த பணி விதிகளின்படி நான் தனியாக மருத்துவமனை நடத்த முடியாது.
அண்மையில் துணை பேராசிரியராக எனக்கு பதவி உயர்வு கிடைத்தது. இந்த பதவிக்கான விதிகளின்படி எனது பணி நேரம் தவிர்த்து இதர நேரங்களில் தனியாக மருத்துவம் பார்க்கலாம். எனது தாயாரின் நீண்ட நாள் விருப்பத்தின்படி புர்லாவில் மருத்துவமனை தொடங்கி, ஒரு ரூபாய் கட்டணத்தில் ஏழைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறேன்.
எனது மனைவி மருத்துவர் சிகாவும் என்னோடு இணைந்து ஏழைகளுக்கு சேவை செய்கிறார். இருவரும் சேர்ந்து காலை 7 மணி முதல் 8 மணி வரையும் மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.
ஏழைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் எங்கள் மருத்துவமனைக்கு அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். இப்போதைக்கு வாடகை கட்டிடத்தில் மருத்துவமனை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 2019 ஜூன் மாதம் ஒடிசாவின் சிபிலிமா பகுதியில் முதிர்வயது தொழு நோயாளி சாலையை கடக்க முடியாமல் தவித்து நின்றார். அப்போது அவ்வழியாக காரில் சென்ற மருத்துவர் சங்கர் ராம்சந்தனி, தனது காரை ஓரமாக நிறுத்திவிட்டு, தொழுநோயாளியை அவரது குடிசை வரை தூக்கி சென்றார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்கள், நாளிதழ்களில் வெளியானது. அவரை கவுரவிக்கும் வகையில் ஒடிசா சுகாதாரத் துறை தனது இணையத்தில் மருத்துவர் சங்கர் ராம்சந்தனியின் புகைப்படத்தை வெளியிட்டது.
கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருந்த காலத்தில், புர்லா மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு மனிதநேயத்துடன் சிகிச்சை அளித்தார். மக்களிடையே அச்சத்தைப் போக்க ஒரு கரோனா நோயாளியை தனது காரிலேயே அழைத்துச் சென்றார்.
மருத்துவச் சேவை புனிதமானது என்பதற்கு மருத்துவர் சங்கர் ராம்சந்தனி வாழும் சாட்சியாக விளங்குகிறார்.