Published : 15 Feb 2021 03:12 AM
Last Updated : 15 Feb 2021 03:12 AM

ஆந்திராவில் வேன் மீது லாரி மோதி 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்

ஆந்திராவில் வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பெண்கள், ஒரு வயது குழந்தை உட்பட14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 4 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மதனபள்ளி பாலாஜிகாலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜாபர்வலி (32). இவர் தனது குடும்பத்தினர் 18 பேருடன் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீருக்கு நேற்று முன்தினம் இரவு வேனில்புனித யாத்திரை சென்றார். இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணி அளவில், ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், வெல்துர்த்தி மண்டலம், மாதாபுரம் அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது அவர்களின் வேன் வேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் ஜாபர்வலி, ரஃபி (36), மஸ்தான் (30), நசீரா பி (65), தஸ்தகிரி (50), அம்மாஜான் (46), சமீரா (16), அமிரூன் (15), ரையான் (1), ரோஷினி (25), நவுஜியா (34), அமீர்ஜான் (63), ஓட்டுநர் நசீர் (55), மெக்கானிக் ஷஃபி (38) ஆகிய 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

4 சிறுவர்கள் படுகாயம்

யாஸ்மின் (5), ஹஸ்மா (8), முஷ்டாக் (12) , காசிம்(10) ஆகிய நான்கு சிறுவர்கள் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், கர்னூல் மாவட்ட ஆட்சியர் வீரபாண்டியன், எஸ்.பி. பக்கீரப்பா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கர்னூல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உறங்கியதால்தான் இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திர மாநில ஆளுநர் ஹரிசரண் பஸ்வான், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x