

வீட்டுக்குச் செல்ல தாமதமானதால் தன்னை ஆட்டோ ஓட்டுநர் பாலியல்வன்கொடுமை செய்துவிட்டதாக நாடகமாடிய மாணவியை ஹைதராபாத் போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.
ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த 10-ம் தேதி மாலை புறநகர் பகுதியில் கிழிந்த ஆடைகளுடன் ஒரு புதரின் அருகே விழுந்து கிடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தனது தாய்க்கும் அந்த மாணவி தகவல் கொடுத்தார்.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக ரச்சகொண்டா காவல் ஆணையர் மஹேஷ் பகவத் தலைமையிலான போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் போலீஸார் விசாரித்தனர். அப்போது, தன்னை 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு சாலையோரம் வீசிவிட்டு தப்பிச்சென்றதாக அந்த மாணவி கூறியுள்ளார்.
இதையடுத்து, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீஸார் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக 3 ஆட்டோ ஓட்டுநர்களையும் பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால், அந்த மாணவி கூறியதற்கும், பிடிபட்ட ஆட்டோ ஓட்டுநர்களின் செல்போன் சிக்னல்களுக்கும் தொடர்பே இல்லாமல் இருந்தது.
எச்சரித்து அனுப்பிய போலீஸ்
ஆட்டோ ஓட்டுநர்களின் செல்போன் எண்களை வைத்து, பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்தபோது அவர்கள் எங்கு இருந்தனர் என்பதை ஆய்வு செய்ததில், இவர்கள் யாருமே மாணவி குறிப்பிடும் இடத்தில் இல்லை என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து, மாணவிக்குமருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்பது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக, மாணவியிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டுக்குச் செல்ல தாமதமானதால் தாய் தன்னை திட்டுவார் என பயந்து, பாலியல் வன்கொடுமை நாடகமாடியதை அந்த மாணவி ஒப்புக்கொண்டார். இதேபோல சில ஆண்டுகளுக்கு முன்பும், இதே மாணவி பாலியல் வன்கொடுமை நாடகமாடியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த மாணவியை போலீஸார் எச்சரித்து அனுப்பினர்.