

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக ரூ. 80 ஆயிரம் கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
புதுமையான, நவீனமான, முற்போக் கான, வளம் கொழிக்கும் மாநிலமாக ஜம்மு-காஷ்மீர் மாற்றி அமைக்கப்படும், இதற்கு நிதி பற்றாக்குறை தடையாக இருக்காது. மாநிலத்தின் வளர்ச்சிக் காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் முன்வைத்த காஷ்மீர் மக்களின் கலாச்சார கோட்பாடுகள், சமூக விழிப்புணர்வு, ஜனநாயகம், மனிதநேயம் ஆகிய தாரக மந்திரங்கள் உறுதியுடன் பின்பற்றப்படும்.
காஷ்மீர் குறித்து உலகில் யார் சொல்லும் அறிவுரைகளையும் நான் கேட்கப்போவதில்லை. வாஜ்பாய் யோசனைகளே போதும்.
காஷ்மீரிகளின் சமூக வேட்கையும் கலாச்சார கோட்பாடுகளும் இல்லாமல் இந்தியா முழுமை அடையாது. இந்த மண்ணில் இருந்துதான் சூஃபி பாரம்பரியம் உதயம் ஆனது. இந்த பாரம்பரியம்தான் ஒற்றுமை பற்றியும் ஒற்றுமையின் வலிமையையும் உலகுக்கு போதித்தது.
காஷ்மீர் மாநிலத்துக்கு அறிவித் துள்ள நிதி உதவி முடிந்து விடவில்லை. இது தொடக் கம்தான். டெல்லியின் இதயம் உங்களுக்காக காத்திருக்கிறது. மத்திய அரசின் ரூ. 80,000 கோடி நிதி உதவி இந்த மாநிலத்தின் விதியை மாற்றி அமைக்க உதவும். நவீன ஜம்மு காஷ்மீராக உருவாக இந்த நிதியைப் பயன்படுத்த வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில் இரு சந்ததிகளின் கனவுகள் நனவாகாமல் சிதைந்தன. நல்லது நடக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான். அதற்கு மாநில இளை ஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப் புகள் உருவாக்கப்பட வேண்டும்.
காஷ்மீரில் ஆட்சி நடத்தும் மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி அரசு மாநிலத்தில் இயல்பு நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும்.
மக்களவைத் தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் காஷ்மீர் மக்கள் பெருவாரியாக பங்கேற்று வாக்குரிமையை செலுத்தினர். இதன்மூலம் ஜனநாயகத்தின் மீது மாநில மக்கள் நம்பிக்கை வைத்திருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.
இப்போது ஊராட்சிகளுக்கு அதிகாரம் தரும் நடவடிக்கையில் முதல்வர் முப்தி இறங்கியுள்ளார். இதுதான் வாஜ்பாய் கண்ட கனவு.
கடந்த ஆண்டு வெள்ளத்தால் நஷ்டம் அடைந்த விவசாயிகள், வர்த்தகர்களுக்கு உதவ அரசு விரும்பு கிறது. சுற்றுலா துறை விரைவில் மீட்சி பெறும். கைவினைப்பொருட்கள் உற்பத்தித் தொழில் மேம்படுத்தப்படும், ஆப்பிள் சாகுபடி, குங்குமப்பூ போன்ற வணிகப் பயிர்களுக்கும் முக்கியத்துவம் தரப்படும்.
சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக் போன்றவர்கள் கிரிக்கெட்டில் சாதனை படைத்ததற்கு காரணமான மட்டைகள் காஷ்மீரில் வளரும் வில்வ மரத்தில் தயாரிக்கப்பட்டவை என்பது பெருமை தரக்கூடியதாகும்.
சுமார் 1.75 கோடி இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்கின்றனர். இதில் 5 சதவீதம் பேர் காஷ்மீருக்கு திரும்பினால் இந்த மாநில சுற்றுலா தொழிலின் முகம் மாறிவிடும். இந்த மாநிலத்தின் பழைய கால அமைதி திரும்பி வர அனைத்து தரப்பினரும் உழைக்க வேண்டும்.
இவ்வாறு மோடி பேசினார்.
முதல்வர் முப்தி முகமது சையது, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜிதேந்திர சிங், மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மெஹ்பூபா முப்தி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற் றனர்.
பிரதமர் மோடி அறிவித்த ரூ.80 ஆயிரம் கோடி நிதி உதவியில் ரூ.44,800 கோடி சாலை மேம்பாடு, சுற்றுலா மேம் பாட்டுக்காக ஒதுக்கப் படுகிறது. ரூ.7854 கோடி வெள்ள நிவாரண பணிகளுக்காகவும் ரூ.11,708 கோடி சூரிய மின்உற்பத்தி, நீர் மின் நிலைய உற்பத்திக்காகவும் ரூ.4900 கோடி சுகாதார துறைக்காகவும் வழங்கப்படும் என்று காஷ்மீர் மாநில அரசு அறிவித்துள்ளது.