Published : 28 Jun 2014 08:55 AM
Last Updated : 28 Jun 2014 08:55 AM

காற்றில் பறக்கவிடப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள்: கெயில் விபத்து பற்றி நிபுணர்கள் கருத்து

20 வருடங்கள் பழமையான பைப் லைன்கள்; மேம்படுத்தப்படாத தொழில்நுட்பம்; இவை தான் ஆந்திரம் மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நகரம் கிராமம் மமிடிகுடுரு மண்டலத்தில் ஏற்பட்ட விபத்துக்கு முழுமுதற் காரணம் என கூறுகின்றனர் நிபுணர்கள், உள்ளூர்வாசிகள்.

இந்த விபத்தின் விளைவு, 15 உயிர்கள் பறிபோயின, பெருமளவில் பொருட்சேதம் ஏற்பட்டது.

ஓ.என்.ஜி.சி. எரிவாயு வயலில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயு கெயில் பைப்லைன்கள் மூலம் வெளி இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பைப்லைன் அனைத்துமே 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. பைப்லைன் ஜங்ஷன்கள் பல வெளிப்படையாகவும், கசிவு ஏற்படும் அபாயகரமான சூழலிலுமே இருக்கின்றன.

முதலில், புதிய பைப்லைன்கள் மாற்றப்பட்டிருக்க வேண்டும். எல்லா இடங்களிலும் இல்லாவிட்டாலும் முக்கிய ஜங்ஷன்களிலாவது மாற்றியிருக்க வேண்டும்.

இரண்டாவதாக, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடு என்பது செய்யப்பட்டிருக்க வேண்டும். எரிவாயு கசிவு ஏற்பட்டால் அது குறித்து எச்சரிக்க எந்த ஏற்பாடும் இல்லை என ஓ.என்.ஜி.சி.யில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர், தன் பெயர் வெளியிடக் கூடாது என்ற நிர்பந்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட ஆந்திரம் மாநிலம் துணை முதல்வர் சின்ன ராஜப்பா கூறுகையில்: "கெயில் அதிகாரிகள் பாதுகாப்பை உறுதி செய்வதில் மெத்தனமாகவே இருந்திருக்கின்றனர். கெயில் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மூன்று நாட்களுக்கு முன்னரே அப்பகுதி மக்கள் எரிவாயு கசிவு குறித்து புகார் தெரிவித்திருக்கின்றனர். ஆனால் பெயரளவில் மட்டும் சீரமைப்புப் பணிகளை செய்துவிட்டு அது பற்றி அடுத்தடுத்த நாட்களில் கண்டு கொள்ளவில்லை. மீண்டும் அந்த இடத்தில் கசிவு ஏற்படுகிறதா என்பதுகூட கண்டுகொள்ளப்படாமலேயே இருந்திருக்கிறது.

இப்பகுதியில் எரிவாயு கசிவு என்பது சர்வசாதாரணமாக, அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமலாபுரம் அருகே பசர்லபுடி என்ற இடத்தில் ஏற்பட்ட வாயுக்கசிவு இரண்டு மாத காலம் வரை நீடித்திருக்கிறது.

லேன்கோ நிலையத்திற்க்கு விநியோகிக்கப்படும் எரிவாயு

ஓ.என்.ஜி.சி. மீடியா பிரதிநிதி ஜமீல் பாஷா கூறுகையில்: "கெயில் டிரங் பைப்லைனில், லேன்கோவில் உள்ள நிலையத்திற்கு எரிவாயு அனுப்பப்படுகிறது. ஒரு சதுர அங்குலத்திற்கு 60 அழுத்தங்கள் என்ற அளவில் எரிவாயு அனுப்பப்படுகிறது. இது சராசரியான அழுத்தமே.

முதல்கட்டத் தகவலின்படி சிறிய அளவிலேயே கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. காற்றில் எரிவாயு பரவி இருந்தது. அப்பகுதியில் ஆக்கிரமிப்பு குடியிருப்பில் இருந்த ஒருவர் அடுப்பை பற்ற வைக்க விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பெருமளவில் உயிர், பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

மேலும், விபத்து பகுதியில் இருந்து 250 மீட்டர் தொலைவில் இருந்த ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் 5 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்தனர். கெயில் நிறுவனத்திற்கும் தொடர்பு கொண்டு எரிவாயு விநியோகத்தை உடனடியாக துண்டிக்கச் செய்துள்ளனர் என கூறினார்.

விபத்து குறித்து கருத்து தெரிவிக்க கெயில் அதிகாரிகள் யாரும் முன்வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x