Published : 12 Nov 2015 03:48 PM
Last Updated : 12 Nov 2015 03:48 PM

பிஹார் புதிய எம்.எல்.ஏ.க்களில் 50% பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவை

பிஹார் தேர்தலில் தற்போது வெற்றி பெற்றுள்ளவர்களில் 50 சதவீதத்துக்கும் கூடுதலான எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் சிலர் மீது கொலை, பாலியல் பலாத்காரம், சாதி வன்முறைகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

243 உறுப்பினர்கள் கொண்ட பிஹார் சட்டப்பேரவையில் 142 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இதில் 98 பேர் மீது கொலை, பாலியல் பலாத்காரம், வன்முறை குறித்த வழக்குகள் நடைபெற்று வருகின்றன. இத்தகவலை ஜனநாயகச் சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் இந்தக் கட்சிதான் என்று பிரித்துப் பார்க்க வேண்டிய தேவையில்லை, முன்னணிக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்களில் மூன்றில் 2 பங்கினர் மீது குற்ற வழக்குகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்.எல்.ஏ. ததன் யாதவ் மீது 28 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குற்றம்சாட்டப்பட்டுள்ள புதிய எம்.எல்.ஏ.க்களில் 70 எம்.எல்.ஏ.க்கள் மீது நீதிமன்றம் குற்றப்பதிவுகளை மேற்கொண்டுள்ளது.

அதேபோல் புதிய எம்.எல்.ஏ.க்களில் ரூ.1 கோடிக்கும் மேல் சொத்துள்ளவர்கள் எண்ணிக்கை மும்மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது. மூன்று எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் என்ற விகிதத்தில் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 14 புதிய எம்.எல்.ஏ.க்களிடம் ரூ.10 கோடிக்கும் மேல் சொத்து உள்ளது. புதிய சட்டப்பேரவையின் எம்.எல்.ஏ.க்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.2 கோடி. ஐக்கிய ஜனதா தளக் கட்சி எம்.எல்.ஏ. பூனம் யாதவ் ரூ.39 கோடியுடன் சொத்துகளில் முன்னிலை வகிக்கிறார்.

ஆனால், புதிய அவைக்குள் நுழையும் எம்.எல்.ஏ.க்களில் 57 சதவீதத்தினர் பட்டதாரிகள். 15 எம்.எல்.ஏ.க்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள். அவை உறுப்பினர்களில் பெண்கள் 10 சதவீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x