நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: முதல் அமர்வு முடிவு; 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி மீண்டும் தொடங்கும்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்: முதல் அமர்வு முடிவு; 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி மீண்டும் தொடங்கும்
Updated on
1 min read

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவுக்கு வந்தது. 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி மீண்டும் தொடங்கும்.

நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத்தொடர் இந்த முறை கரோனா வைரஸ் பரவல் காரணமாக நடக்கவில்லை. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 29-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

இரு அமர்வுகளாக பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, பிப்ரவரி 1-ம் தேதி 2021-22ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து குடியுரசுத் தலைவர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் விவாதம் இரு அவைகளிலும் நடந்தது. பட்ஜெட் மீதான விவாதங்களும் இரு அவைகளிலும் நடந்தன.

மாநிலங்களவை 2 நாள் முன்பாக அதாவது 15-ம் தேதி முடிவதற்கு பதிலாக நேற்று (12ம்தேதி) முடித்துக்கொள்ளப்பட்டது. மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்தார். மாநிலங்களவையின் அடுத்த அமர்வு மார்ச் 8-ம் தேதி தொடங்கும்

மக்களவை வழக்கமாக மாலை 4 மணிக்கு தொடங்கும். ஆனால், இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நேற்று அறிவித்தார். அதன்படி இன்று காலை மக்களவை தொடங்கியது.

பட்ஜெட் மீதான விவாத்தில் மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பதில் அளித்தார். அப்போது அவர் பேசுகையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாட்டின் அழிவைப் பற்றியே சிந்திக்கிறார், நாட்டை பிளவுபடுத்தும் குழுக்களுக்கு ஆதரவாக நடக்கிறார் என்று கூறினார். அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன் உரிமை மீறல் நோட்டீஸை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வழங்கியுள்ளார்.

இதனிடையே காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பான மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது ஜம்மு -காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.


இன்றைய கூட்டம் முடிந்தவுடன் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு மார்ச் 8-ம் தேதி மீண்டும் தொடங்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in