Last Updated : 13 Feb, 2021 04:22 PM

 

Published : 13 Feb 2021 04:22 PM
Last Updated : 13 Feb 2021 04:22 PM

ஷாகின் பாக் போராட்டம்: எல்லா இடத்திலும், எந்த நேரத்திலும் போராட முடியாது: தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகின் பாக் போராட்டம் என்பது பொது இடங்களை ஆக்கிரமித்து நீண்டகாலம் நடத்தக்கூடாது என்று கடந்த ஆண்டு பிறப்பித்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எந்த இடத்திலும் எல்லா இடங்களிலும் போராடும் உரிமையை பயன்படுத்த முடியாது எனக் கூறி உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், டெல்லி, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்தன.

குறிப்பாக டெல்லியின் ஷாகின் பாக் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி முதல் 2020 மார்ச் 24-ம் தேதி வரை தொடர் போராட்டங்கள் நடந்தன.

யூனியன் பிரதேசமான டெல்லியில் இஸ்லாமிய மக்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர மத்திய உள்துறை அதிகாரிகளும், டெல்லி போலீஸாரும் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சிஏஏ சட்டத்தைத் திரும்பப் பெற்றால்தான் போராட்டத்தைத் திரும்பப் பெறுவோம் என்று போராட்டக்காரர்கள் தீர்மானமாக இருந்தார்கள்.

ஷாகின் பாக் பகுதியில் நடக்கும் போராட்டத்தால் அப்பகுதி மக்களுக்குப் பெரும் இடையூறாக இருப்பதாகக் குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தில் சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான அமித் ஷாகினி என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரே ஆகியோர் 2020ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி தீர்ப்பளித்தனர். அதில் “ஜனநாயகமும், எதிர்ப்பும் கைகோத்துச் செல்ல வேண்டும். டெல்லி ஷாகின் பாக் போன்ற பொது இடங்களைக் காலவரையின்றி ஆக்கிரமித்துப் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது.

ஷாகின் பாக் மட்டுமல்ல எந்தப் பொது இடத்தையும் காலவரையின்றி போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்துப் போராட்டம் நடத்துவதை நாங்கள் ஏற்க முடியாது என்பதைத் தெளிவாகக் கூறுகிறோம்.

சாலைகளில் இடையூறு ஏற்படுத்துதல், மற்ற குடிமக்களுக்கு அசவுகரியங்களை ஏற்படுத்தும். இது சட்டத்தால் அனுமதிக்கப்படவில்லை.அமைதியான வழியில் போராட்டம் நடத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம். ஆனால், போராட்டம் நடத்துவதற்கு எனத் தனியாக இடம் இருக்கிறது. அங்கு நடத்தலாம்.

சாலைகளை மறித்துப் போராட்டம் நடத்துவதையும், போராட்டம் நடத்தும் உரிமை, எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையையும் நாங்கள் சமநிலையில் வைக்க விரும்புகிறோம்” எனத் தீர்ப்பளித்தனர்.

இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி சமூக செயல்பாட்டாளர்கள் 12 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல், அனிருத்தா போஸ், கிருஷ்ணா முராரே ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு கடந்த 9-ம் தேதி தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்ப்பின் நகல் நேற்று இரவுதான் வெளியானது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் “ போராட்டம் நடத்தும் உரிமை என்பது, எந்த இடத்திலும் எல்லா இடங்களிலும் பயன்படுத்த முடியாது. சில நேரங்களில் திடீரென போராட்டம் நடக்கலாம். ஆனால், அந்த போராட்டம் நீண்டகாலத்துக்கு குறிப்பிட்ட இடத்தில் நீடிப்பதும், பொது இடங்களை நீண்டகாலமாக ஆக்கிரமித்து பிறரின் உரிமைகளை மீறும் வகையில் போராட்டம் நடத்துவதையும் ஏற்க முடியாது.

நாங்கள் ஏற்கெனவே கூறியதைத்தான் மீண்டும் கூறுகிறோம். பொது இடங்களை மறித்து போராட்டம் நடத்த முடியாது. போராட்டங்கள் தனிப்பட்ட இடத்தில் நடக்க வேண்டும். நாங்கள் ஏற்கெனவே அளித்த தீர்ப்பில் மீண்டும் எந்த திருத்தம் செய்யவோ, மறு ஆய்வுசெய்யவே தேவையில்லை” எனத் தீர்ப்பளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x