Published : 13 Feb 2021 04:02 PM
Last Updated : 13 Feb 2021 04:02 PM

ஜம்மு -காஷ்மீர் விஷயத்தை அரசியலாக்காதீர்கள்; உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்: அமித் ஷா திட்டவட்டம்

ஜம்மு -காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து கடந்த 2019-ம் ஆண்ணடு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்க வகை செய்யும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட்டன. இதன்படி சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும், சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும் உருவாக்கப்பட்டன.


இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக காஷ்மீரின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் நிலைமை சீரடைந்ததை தொடர்ந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்தநிலையில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதொடர்பான மசோதா மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவாதத்தில் பங்கேற்று பேசினார். அவர் கூறியதாவது:

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் நீண்ட நாட்களாக தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதி. அதற்கு ஏற்பட்ட காயம் கொஞ்சம் கொஞ்சமாக ஆறி வருகிறது. மணிஷ் திவாரி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காஷ்மீரில் நடந்ததை நினைவு கூர்ந்தார்.

அப்போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகினர். அமைதியின்மை நிலவிய அந்த நாட்களை நான் மீண்டும் நினைத்து பார்க்க விரும்பவில்லை. அதுபோன்ற நாட்கள் மீண்டும் அங்கு வராது. இப்போதைய மத்திய அரசு அதில் உறுதியாக உள்ளது.

ஜம்மு -காஷ்மீர் விவகாரத்தை அரசியல் கட்சிகள் அரசியல் ஆக்கக் கூடாது. பெரும் இன்னாலுக்கு ஆளான மக்களை மேலும் ரணப்படுத்தும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.
ஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்.

ஜம்மு -காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. எதிர்க்கட்சிகள் கூட இதை மறுக்க முடியாது. பஞ்சாயத்து தேர்தலில் 51 சதவீத வாக்குகள் பதிவாகின. அனைவரும் அச்சமன்றி வாக்களிக்க முடிந்தது.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x