Last Updated : 13 Feb, 2021 03:14 PM

 

Published : 13 Feb 2021 03:14 PM
Last Updated : 13 Feb 2021 03:14 PM

நாட்டின் அழிவுக் காலத்தைப் பற்றியே சிந்திக்கும் அவநம்பிக்கை மனிதர் ராகுல் காந்தி: நிர்மலா சீதாராமன் சாடல்

மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

அரசியலமைப்பில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களைத் தொடர்ந்து அவமானப்படுத்தியும், பல்வேறு விவகாரங்களில் எதிர்மறையாகவும் பிரச்சாரங்களைச் செய்துவரும் ராகுல் காந்தி, நாட்டின் அழிவுக் காலத்தைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அவநம்பிக்கை மனிதர் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாகச் சாடினார்.

2021-22ஆம் ஆண்டு பட்ஜெட் குறித்த விவாதம் மக்களவையில் இன்று நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். குறிப்பாக, கடந்த வியாழக்கிழமை ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து அவரைக் கடுமையாகச் சாடினார்.

இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

''ராகுல் காந்தியின் பேச்சில் 10 முக்கிய விஷயங்களை எதிர்பார்த்தேன். ஆனால், அவர் நாட்டை இழிவுபடுத்தும் விதமாகவே பேசி வருகிறார். போலியான கட்டுக்கதைகளை உருவாக்கும் ராகுல் காந்திக்கு, குற்றச்சாட்டுகளுக்கு அளிக்கும் பதிலைக் கேட்கும் பொறுமை இல்லை.

அரசியலமைப்புகளில் உயர்ந்த தலைமை வகிப்போர் பற்றி அவதூறாகவும், பல்வேறு விஷயங்களில் போலியான கட்டுக்கதைகள் பற்றியும், தேசத்தின் வளர்ச்சி பற்றியும் எதிர்மறையாகவே ராகுல் காந்தி தொடர்ந்து பேசி வருகிறார்.

நாட்டின் அழிவுக் காலத்தைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அவநம்பிக்கை மனிதராக ராகுல் இருப்பாரோ என அச்சமாக இருக்கிறது. கெட்ட காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் மனிதர் தலைமையில்தான் எதிர்க்கட்சிகளும் நடக்கின்றன.

இந்த தேசத்தின் மீது நம்பிக்கை கொள்ளாமல் தொடர்ந்து அவமதிக்கும் வகையில்தான் ராகுல் காந்தி பேசி வருகிறார். கரோனா காலத்தில் ராகுல் காந்தி என்ன பேசினார் என்பது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால், அவர் பேசியதை மீண்டும் கூறி, இந்த அவையின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

பட்ஜெட் விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பட்ஜெட்டைப் பற்றி மட்டும் பேசவில்லை. நான் காங்கிரஸ் கட்சியிடம் ஒன்று கேட்க விரும்பினேன். எதற்காக வேளாண் சட்டங்களைப் பற்றிப் பேசிவிட்டு இப்போது அதுகுறித்துக் கேட்டால் பின்வாங்குகிறார்கள் என்ற கேள்விக்கு இதுவரை அந்தக் கட்சியிடம் இருந்து பதில் இல்லை.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தலின்போது விவசாயிகள் கடன் தள்ளுபடி குறித்து தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கூறி இருந்தது. ஆனால், அதுகுறித்து தனது பேச்சில் ஏன் ராகுல் காந்தி கூறவில்லை?

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் பிரச்சினை பற்றி ராகுல் காந்தி பேசவில்லை. வயல்களில் வேளாண் கழிவுகளை எரிப்பதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிப் பேசவில்லை.

விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டத்தில் எந்த அம்சங்கள் எதிராக உள்ளன என்பது குறித்து ராகுல் காந்தி ஏதும் பேசவில்லை. ஏபிஎம்சி சந்தை பற்றி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசியுள்ளார். அதுகுறித்து ராகுல் காந்தி ஏதும் பேசவில்லை.

அரசியலமைப்பின் தலைமைப் பதவிகளில் இருப்பவர்களைத் தொடர்ந்து ராகுல் காந்தி அவமதித்து வருகிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் பிரதமராக மன்மோகன் சிங் இருந்த நேரத்தில் அவசரச் சட்ட நகலைக் கிழித்து எறிந்த மனிதர்தானே ராகுல் காந்தி. நாட்டைப் பிளவுபடுத்தும் குழுக்களுடன் காங்கிரஸ் கட்சி சேர்ந்துகொண்டு, பொய்யான கருத்துகளையும், போலியான கட்டுக்கதைகளையும் கூறி இந்தியாவை இழிவுபடுத்துகிறது''.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x