போக்ஸோ சட்டம்: சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற பெண் நீதிபதிக்கு பதவிக்காலம் குறைப்பு: உச்ச நீதிமன்றம் நடவடிக்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

போக்ஸோ சட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய இரு தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கானேடிவாலாவின் பதவிக்காலத்தை ஓர் ஆண்டாக குறைத்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கூடுதல் அமர்வு நீதிபதியாக புஷ்பாவை 2 ஆண்டுகள் நியமித்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்த நிலையில் அதை ஓர் ஆண்டாகக் குறைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்த தீர்ப்பில், “ 12 வயது சிறுமியின் ஆடையோடு உடம்பைத் தொடுவது போக்ஸோ சட்டத்தில் பாலியல் குற்றாமாகாது. உடலோடுஉடல் தொடர்பில் இல்லை” எனத் தீர்ப்பளித்து குற்றம்சாட்டப்பட்டவரை விடுவித்தார்.

அதேபோல கடந்த 15-ம் தேதி நீதிபதி கனேடிவாலா அளித்த தீர்ப்பில் “ 5 சிறுமியின் கைகளைப் பற்றுவதும், பேண்ட் ஜிப்பை திறக்கச் செய்ய வைப்பதும் போக்ஸோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமில்லை எனக் கூறி தண்டனை பெற்றவரை விடுவித்து” தீர்ப்பளித்தார்.

இந்த இரு தீர்ப்புகளும் சமூகத்தில் பெரும் விவாதத்தை எழுப்பின. இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையமும், குழந்தைகள் உரிமை ஆணையமும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. இதைத்தொடர்ந்து இந்த தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீதிபதி புஷ்பா கனேடிவாலா
நீதிபதி புஷ்பா கனேடிவாலா

இதற்கிடையே கடந்த மாதம் 20-ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, ஆர்எப் நாரிமன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமர்வு, நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமித்து பரிந்துரைத்தது.

நீதிபதி புஷ்பா கனேடிவாலா அளித்த இரு தீர்ப்புகளும் சர்ச்சையைக் கிளப்பியதைத் தொடர்ந்து தங்கள் பரிந்துரையை கொலிஜியம் திரும்பப் பெற்றனர்.

மேலும், மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு புஷ்பா கனேடிவாலாவை நியமித்து உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை(நேற்று) மகாராஷ்டிரா அரசு வெளியி்ட்ட அறிவிக்கையில், “ மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக புஷ்பா கனேடிவாலா 2 ஆண்டுகளுக்குப் பதிலாக ஓர் ஆண்டுக்கு மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்” என அறிவித்தது.

பொதுவாக கூடுதலாக அமர்வு நீதிபதியாக 2 ஆண்டுகள் நியமித்து பின்னர் உயர் நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை கனேடிவாலா வழங்கியதால், ஓர் ஆண்டு மட்டுமே கூடுதல் நிதிபதியாக நியமிக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in