

மும்பையில் தன் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து, அந்தக் காட்சியை வீடியோ எடுத்து மாணவியை மிரட்டி வந்த பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 21-ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி போலீஸில் கூறும்போது, "கடந்த 21-ம் தேதி நான் என்னுடன் பயிலும் மாணவரின் வீட்டுக்குச் சென்றேன். பாடத்தில் உள்ள சந்தேகங்களை தீர்ப்பதாகக் கூறியிருந்ததால் அங்கு சென்றேன்.
நான் அங்கு சென்றபோது அவருடன் மேலும் 3 பேர் இருந்தனர். 4 பேரும் சேர்ந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த சம்பவத்தை வீடியோவும் எடுத்தனர். நடந்ததை வெளியில் சொன்னால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டினர். நான் அமைதியாக வந்துவிட்டேன்" என்றார்.
பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவர் அந்த வீடியோவை வாட்ஸ்ஆப்பில் தனது நண்பரிடம் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவியது. வீடியோவை பார்த்த பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர் ஒருவர் அது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அப்போதுதான் நடந்து சம்பவத்தை அந்த மாணவி முழுமையாக வீட்டில் தெரிவித்தார்.
இதனையடுத்து மலாட் பகுதி போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது. நடந்த சம்பவத்தை போலீஸாரிடம் பாதிக்கப்பட்ட இளம் பெண் விவரித்தார்.
இதனடிப்படையில் போலீஸார் 4 பேரையும் கைது செய்தனர். கைதான 4 பேருக்கும் வயது 15. நால்வருமே பள்ளி மாணவர்கள். தற்போது அவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடைபெறுவதாக போலீஸ் எஸ்.ஐ. சஷான்க் சந்த்போர் தெரிவித்தார்.