

உத்தரப் பிரதேசத்தில் கோயில், கும்பமேளா என பிரியங்கா காந்தி இந்துத்துவா அரசியலைக் கையில் எடுத்துள்ளார். இதனால், அங்கு 2022இல் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக்கக் காங்கிரஸ் திட்டமிடுவதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் கட்சிப் பணிகளை பல ஆண்டுகளாகத் திரைமறைவில் செய்து வந்தவர் பிரியங்கா. இவரை தேசிய அரசியலின் தனது முக்கியத் துருப்புச்சீட்டாகப் பாதுகாத்து வைத்தது காங்கிரஸ்.
எனினும், மக்களவைத் தேர்தலுக்காக கடந்த பிப்ரவரி 2019இல் களம் இறக்கப்பட்டார் பிரியங்கா. இந்த நேரடி அரசியலால் அவர், தேசிய பொதுச் செயலாளராக்கப்பட்டு உ.பி. மாநிலப் பொறுப்பாளராகவும் உள்ளார்.
இவரது வரவால் காங்கிரஸ் உ.பி.யில் எதிர்பார்த்த பெரிய முன்னேற்றம் கிடைக்கவில்லை. அவரது வரவிற்குப் பிறகு காங்கிரஸின் நிலை மேலும் நலிந்து, தற்போது கட்சியின் முக்கிய முகமாக பிரியங்கா மட்டுமே உ.பி.யில் மிஞ்சியுள்ளார்.
இந்நிலையில், ‘ஜெய் கிஸான், ஜெய் ஜவான்’ எனும் முழக்கத்துடன் உ.பி.யில் பிரியங்கா பல்வேறு கூட்டங்கள் நடத்தி வருகிறார். விவசாயிகளின் டெல்லி போராட்டத்திற்கும் ஆதரவளிக்கும் வகையிலானதில் அவர், உ.பி.யின் மஹா பஞ்சாயத்துகளிலும் கலந்துகொண்டு வருகிறார்.
கடந்த 10ஆம் தேதி சஹரான்பூரில் நடைபெற்ற மஹா பஞ்சாயத்திற்காக விமானம் மூலம் உத்தராகண்டின் டெஹராடூனில் இறங்கினார். பிறகு வழியில் வந்த கோயில்களுக்குச் சென்று நடத்திய சிறப்பு பூஜைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
குறிப்பாக, சஹரான்பூரின் பிரபலமான சகும்பாரி தேவி கோயிலில் சிறப்பு பூஜை செய்து, நெற்றியில் செந்நிறத் திலகமுடன் மேடையில் பேசினார். இதன் மறுநாள் அலகாபாத் சென்று தங்கியவர் அங்கு தனது தாத்தா நேருவின் ஆனந்த பவன் நினைவு இல்லத்தில் அஞ்சலி செலுத்தினார்.
பிறகு கும்பமேளா முகாமில் இருந்த குஜராத் துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியரான சுவாமி சொரூபானந்தைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார். அடுத்து வந்த மவுனி அமாவசைக்காக பல லட்சம் பக்தர்களுடன் பிரியங்காவும் முக்கூடலில் மூழ்கி புனிதக் குளியல் முடித்தார்.
மேலும், வரும் பிப்ரவரி 19இல் மதுராவில் நடைபெறவிருக்கும் மஹா பஞ்சாயத்திலும் கலந்துகொள்ளத் திட்டமிட்டுள்ளார். அப்போது, காசி மற்றும் அயோத்திற்கும் செல்ல பிரியங்கா முடிவு செய்துள்ளார்.
இதுபோல், இந்துத்துவா பாணியிலான பிரியங்காவின் அரசியல் நடவடிக்கைகளால், காங்கிரஸிற்கு முன்னேற்றம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உ.பி.யில் ஆளும் பாஜகவை 2022 சட்டப்பேரவை த் தேர்தலில் எதிர்கொள்ள இந்தவகை அரசியல் அவசியம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதுகுறித்து உ.பி. மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் கூறும்போது, ''வெறும் முஸ்லிம் ஆதரவுக் கட்சி எனும் பெயர் மட்டுமே காங்கிரஸிடம் தங்கியுள்ளது. இதை உடைக்க, பிரியங்காவின் இந்துத்துவா நடவடிக்கைகளால் காங்கிரஸுக்கு இந்துக்கள் இடையேயும் செல்வாக்கு பெருகும்.
வரும் தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தினால்தான் கட்சிக்கு எதிர்காலம் என்ற நம் வலியுறுத்தலை தலைமை ஏற்கத் தயாராகிறது. ஒரு காலத்தில் பிரதமர் பதவிக்குப் பேசப்பட்டவரை உ.பி.யின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தும் நிலை உருவாகிவிட்டது'' எனத் தெரிவித்தனர்.
பிரியங்காவின் தீவிர அரசியலுக்குப் பின் வந்த மக்களவைத் தேர்தலில் அவரது சகோதரரும் கட்சியின் அப்போதைய தலைவருமான ராகுல் காந்திக்கு அமேதியிலேயே தோல்வி கிடைத்தது. இவர்கள் சமாஜ்வாதியுடன் வைத்த கூட்டணியும் பலனில்லாமல் போனது. தேர்தல் தோல்வியால் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த வருடம் அக்டோபரில் வந்த உ.பி.யின் ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலிலும் காங்கிரஸுக்குப் பெரிய பலன் கிடைக்கவில்லை. இதன் பிரச்சாரத்திற்கு பிரியங்கா தலைமை ஏற்றிருந்தார்.
உ.பி.யில் வரவிருக்கும் 2022 தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கட்சியின் குறைந்தபட்ச செல்வாக்கையாவது மீட்க பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதைத் தவிர காங்கிரஸுக்கு வேறு வழியில்லை எனக் கருதப்படுகிறது.