Last Updated : 13 Feb, 2021 08:52 AM

 

Published : 13 Feb 2021 08:52 AM
Last Updated : 13 Feb 2021 08:52 AM

தஜிகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது

நில அதிர்வு ஏற்பட்டதையடுத்து, ஸ்ரீநகரில் மக்கள் சாலையில் குழந்தைகளுடன் பாதுகாப்பாக நின்ற காட்சி.

புதுடெல்லி

தஜிகிஸ்தானை மையமாகக் கொண்டு நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இந்த பூகம்பத்தால், டெல்லி, வடமாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால், வீடுகளில் இருந்த மக்கள் அவசரமாக வெளியே ஓடினர்.

தஜிகிஸ்தானில் பூமியில் 19 கி.மீ. ஆழத்தில் நேற்று 6.3 ரிக்டர் அளவுக்கு நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கைபர்-பக்துன்கவா, பஞ்சாப் மாகாணங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் டெல்லி, டெல்லி என்சிஆர், வடமாநிலங்களிலும் இந்த நில அதிர்வு சில வினாடிகளுக்கு நீடித்தது. இதனால் வீடுகளில் இருந்த மக்கள் நில அதிர்வு கண்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் வீட்டை விட்டு வெளியே சாலைக்கு ஓடி வந்தனர். ஆனால், இதுவரை வடமாநிலங்களில் நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் குறித்துத் தகவல் ஏதும் இல்லை.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காணொலி மூலம் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அறை முழுவதும் குலுங்கியது.

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் பதிவிட்ட ட்விட்டர் கருத்தில், “அமிர்தசரஸ் உள்ளிட்ட பஞ்சாப்பின் பிற பகுதிகளில் சேதம் ஏற்பட்டதற்கான எந்தத் தகவலும் இல்லை. பஞ்சாப் போலீஸார், மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள். அனைவரின் பாதுகாப்புக்காகவும் பிரார்த்திப்போம்” எனத் தெரிவித்தார்.

மத்திய நில அறவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம்.ராஜீவன் கூறுகையில், “கணினியில் பதிவான தகவல்களை நம்பி தஜிகிஸ்தான், அமிர்தசரஸ் ஆகியவற்றில் இரு நிலநடுக்கம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இரு நில அதிர்வு ஏற்படவில்லை. தஜிகிஸ்தானில் மட்டும்தான் இரவு 10.31 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இமயமலை மற்றும் இந்துகுஷ் மலைப்பகுதிகளில் ஏற்படும் நில அதிர்வுகள் இந்திய-கங்கை பகுதிகளில் உணரப்படும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x