

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சாருக்கு பண மோசடி தடுப்புக்கான சிறப்பு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது.
ஐசிஐசிஐ - வீடியோகான் கடன் மோசடி வழக்கு தொடர்பாக மும்பையில் உள்ள பண மோசடி தடுப்புக்கான சிறப்பு நீதிமன்றத்தில் சந்தா கொச்சார் நேற்று ஆஜர் ஆனார். அப்போது ரூ.5 லட்சம் பிணைத் தொகையின் பெயரில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ-வாக இருந்த சந்தா கோச்சார் 2009 ஜூன் மற்றும் 2011 அக்டோபர் வரையிலான காலத்தில் வீடியோகான் நிறுவனத்துக்கு ரூ.1,875 கோடி ரூபாய் முறைகேடாக கடன் வழங்கி ஆதாயம் அடைந்ததாக குற்றம்சாட்டப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பான வழக்கில், சந்தா கொச்சார், அவரது கணவர் தீபக் கொச்சார், வீடியோகான் நிறுவனத் தலைவர்வேணுகோபால் தூத் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தீபக் கொச்சார் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கில் சந்தா கொச்சாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.