கரோனாவால் எழுந்த நெருக்கடியால் கேரள அரசுக்கு ரூ.11.7 கோடியை செலுத்த முடியவில்லை: உச்ச நீதிமன்றத்தில் பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் விளக்கம்

கரோனாவால் எழுந்த நெருக்கடியால் கேரள அரசுக்கு ரூ.11.7 கோடியை செலுத்த முடியவில்லை: உச்ச நீதிமன்றத்தில் பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் விளக்கம்
Updated on
1 min read

கரோனாவால் எழுந்த நெருக்கடியால் கேரள அரசுக்கு ரூ.11.7 கோடியை செலுத்த முடியவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. அப்போது கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோயில் மூடப்பட்டது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி கோயில் திறக்கப்பட்டது.

முன்னதாக பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் தொடர்பான வழக்கை கடந்த ஆண்டு ஜூலையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், திருவிதாங்கூர் அரச குடும்பத்தினர் கோயிலை நிர்வகிக்க முழு உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்தது. மேலும் அரச குடும்பத்தினர் கோயில் நிர்வாகத்தை முழுமையாக ஏற்கும்வரை, கோயிலின் பாதுகாப்பு, பராமரிப்பு செலவுகளை கேரள அரசே மேற்கொள்ள வேண்டும். அந்த தொகையை கோயில் நிர்வாகம் திருப்பி வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது. கோயில் நிர்வாகத்தை கவனிக்க 2 சிறப்பு குழுக்களையும் உச்ச நீதிமன்றம் நியமித்தது.

இதில் ஒரு குழு, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், "கரோனா வைரஸால் எழுந்த நெருக்கடியால் நன்கொடைகள் குறைந்துள்ளன. எனவே பாதுகாப்பு, பராமரிப்பு செலவினங்களுக்காக கேரள அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.11.7 கோடியை செலுத்த முடியவில்லை. கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்" என்று கோரப்பட்டது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், இந்து மல்ஹோத்ரா அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, "இந்த நேரத்தில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. பத்மநாப சுவாமி கோயில் நிர்வாகத்தின் கோரிக்கையை கேரள அரசு பரிசீலிக்க வேண்டும். கோயிலின் வரவு, செலவு தணிக்கை அறிக்கை குறித்து செப்டம்பரில் விசாரணை நடத்தப்படும்" என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in