

மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநரிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், "மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சரான கோபிநாத் முண்டே டெல்லி விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த போது அவரது கார் மீது மற்றொரு கார் மோதியது.
இதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக முண்டேவின் கார் மீது மோதிய காரின் ஓட்டுனரான குர்வீந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார்.
முண்டே மும்பை செல்வதற்காக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் வரும் வழியில் அரவிந்தர் சவுக் நோக்கி லோதி சாலை செல்லும்போதும் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
அமைச்சரின் கார் மீது மோதிய ஓட்டுநர், தனது காரை எங்கேனும் விதிகளை மீறி சிக்னலில் நிற்காமல் வந்து மோதி இருக்கலாம் என்ற கண்ணோட்டத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கோபிநாத் முண்டே இன்று காலை விமான நிலையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். தெற்கு டெல்லி அரபிந்தோ மார்க் பகுதியில் கார் சென்றபோது விபத்து நடந்தது.
இந்த விபத்தில் சாலை விபத்தில் காயம் ஏதும் ஏற்படாவிட்டாலும், அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. கார் ஓட்டுநரிடம் தண்ணீர் கேட்டிருக்கிறார். தன்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் கூறியிருக்கிறார். உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தது குறிப்பிடத்தக்கது.