அலகாபாத் கும்பமேளாவில் புனிதக் குளியல்: மோடி, மோகன் பாகவத் செய்யாததை பிரியங்கா செய்ததாக சங்கராச்சாரியர் சொரூபானந்த் பாராட்டு

அலகாபாத் கும்பமேளாவில் புனிதக் குளியல்: மோடி, மோகன் பாகவத் செய்யாததை பிரியங்கா செய்ததாக சங்கராச்சாரியர் சொரூபானந்த் பாராட்டு
Updated on
1 min read

அலகாபாத் கும்பமேளாவில் பல லட்சம் பக்தர்கள் இன்று மவுனி அமாவாசையில் புனிதக் குளியல் நடத்தினர். இதில் பிரதமர் நரேந்திர மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் செய்யாததை பிரியங்கா செய்ததாக சங்கராச்சாரியர் சொரூபானந்த் பாராட்டியுள்ளார்.

உ.பி.யின் சஹரான்பூரில் பிப்ரவரி 10இல் நடைபெற்ற மஹா பஞ்சாயத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா கலந்துகொண்டார். இதற்கு முன்பாக ஐந்து கோயில்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்தார்.

மறுநாள் அலகாபாத்தில் நடைபெற்று வரும் கும்பமேளாவிற்கு வந்தவர் அங்கு இன்று தங்கினார். அதன் முக்கூடலில் மவுனி அமாவாசையை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் புனித நீராடினர்,

அவர்களுடன் தன் மகள் மிரய்யாவுடன் முக்கூடலில் புனித நீராடினார் பிரியங்கா. பிறகு அதன் கரையிலுள்ள மன்காமேஸ்வர் கோயிலுக்குச் சென்றவர் அங்கு முகாமிட்டிருந்த குஜராத் சரஸ்வதி பீடத்தின் சங்கராச்சாரியரான சுவாமி சொரூபானந்திடம் ஆசீர்வாதம் பெற்றார்.

அப்போது பிரியங்காவிடம் சுவாமி சொரூபானந்த் அறிவுரை கூறும்போது, ''உங்கள் பாட்டி இந்திரா காந்தி என்னிடம் ஆசீர்வாதம் பெற வந்துள்ளார். உங்கள் குடும்பத்தினர் என்னை குருவாகக் கருதினார்கள்.

இந்துக்களின் நலனுக்காகப் பணியாற்றினால்தான் அரசியலில் முன்னேற முடியும். அரசியலில் தேச நலனைக் காப்பது முக்கியம்'' எனத் தெரிவித்தார்.

சுமார் 25 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பில் பிரியங்காவிடம் மேலும் சங்கராச்சாரியர் சொரூபானந்த் கூறுகையில், ''துறவறத்திற்கு முன் நான் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டு 1942இல் 9 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன்.

மவுனி அமாவாசையன்று நீங்கள் இங்கு புனித நீராடி இந்துக்கள் மனதை வென்றுவிட்டீர்கள். பிரதமர் நரேந்தர் மோடியும், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தும் கூட இதை இன்று செய்யவில்லை” எனப் பாராட்டியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது சங்கராச்சாரியர் சொரூபானந்த் சார்பில் பிரியங்காவிற்கு பனராஸி சால்வை பரிசாக அளிக்கப்பட்டது. இத்துடன் அவரது மகளுக்கும் சேர்த்து ருத்ராட்ச மாலைகள் அணிவிக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in