

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏழைகள் நலனுக்காகவே திட்டங்களை வகுக்கிறது. பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறது. ஆனால், இது பணக்காரர்களுக்கான அரசு, பணக்காரர்கள் நலனுக்காகச் செயல்படுகிறது என எதிர்க்கட்சிகள் தவறான கதையை உருவாக்குகின்றன என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சாடினார்.
மாநிலங்களவையில் 2021-22ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடந்து வருகிறது. இதில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பணக்காரர்களுக்கானது. சாமானிய மக்களுக்கும், ஏழைகளுக்கும் திட்டம் ஏதும் இல்லை. பணக்காரர்களுக்காகப் பணியாற்றும் அரசு என்று குற்றம் சாட்டினர்.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பேசியதாவது:
''மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் தற்சார்பு இந்தியாவுக்கான பட்ஜெட். வரிசெலுத்துவோரை நாங்கள் மதிக்கிறோம். அவர்களின் பணத்தை முறையாகப் பயன்படுத்த நினைக்கிறோம். நாங்கள் பணத்தை எவ்வாறு செலவிடுகிறோம் என்பதையும் தெளிவாகத் தெரிவிக்கிறோம். அதற்குச் சிறந்த உதாரணம் உணவு மானியம். இந்திய உணவுக் கழகத்தின் வரவு செலவு அறிக்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதே சாட்சியாகும்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பட்ஜெட்டில் வளர்ச்சி குறித்த எண்ணில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 2007-08ஆம் ஆண்டு பட்ஜெட்டிலும் 3 இடங்களில் சந்தேகத்துக்கிடமான எண்கள் இருந்தன. வெளிப்படைத் தன்மையும் பட்ஜெட்டில் இல்லை. மூடி மறைப்பதில் எனக்கு அவசியமில்லை. பிரதமர் மோடிக்கும் இதில் நம்பிக்கையில்லை.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் சாமானிய ஏழைகளுக்கானது. உலகமே கரோனாவின் தாக்கத்தில், பாதிப்பில் இருந்தபோது, தற்சார்பு இந்தியாவை உருவாக்க தாக்கல் செய்த பட்ஜெட். பொருளாதார வளர்ச்சியைத் தூண்டிவிடும், ஊக்கியாக இருக்கும் பட்ஜெட்.
பட்ஜெட் மூலம் கிடைக்கும் ஊக்கம், வலிமையான தூண்டுதல் தேவையுள்ளவர்களுக்கு குறுகியகால நிவாரணத்தை அளிக்காமல், நீண்டகாலத்தில், நடுத்தரக் காலத்திலும் நிவாரணத்தை வழங்கி நிலையான வளர்ச்சியை உருவாக்கும். இதன் மூலம் இந்தியா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளதாாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கும்.
மத்திய அரசின் திட்டங்களான குறிப்பாக சாலை வசதி, வேளாண்மை, வீட்டு வசதி, மாணவர்களுக்கு உதவித்தொகை, மக்களுக்கு மின்வசதி ஆகியவை அனைத்தும் ஏழைகளுக்கானது. ஏழைகளின் வளர்ச்சியை முன்வைத்துதான் இந்த அரசு செயல்படுகிறது.
பிரதமர் ஆவாஸ் திட்டத்தில் இதுவரை 1.67 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டுள்ளன. சவுபாக்கியா திட்டத்தில் கடந்த 2017 அக்டோபரிலிருந்து 2.67 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரதமர் கிராம் சரக் யோஜனாவின் கீழ் 2015 முதல் 2,11,192 கி.மீ. சாலைகள் கிராமங்களுக்கு அமைக்கப்பட்டுள்ளன. கிராமங்களில் பணக்காரர்கள் வசிக்கிறார்களா, கிராமங்களில் ஏழைகள் இல்லையா? இந்தச் சாலைகள் யாருக்காக அமைக்கப்பட்டன?
ஆனால், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும், பட்ஜெட் முழுவதும் பணக்காரர்களுக்கானது என்பது போல் எதிர்க்கட்சிகள் தவறான கதையை உருவாக்குகின்றன. மத்திய அரசு என்ன செய்தாலும், குற்றச்சாட்டு கூறுவதை எதிர்க்கட்சிகள் பழக்கமாக வைத்துள்ளன''.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.