ரூ.10 கோடி அபராதம் செலுத்தாமல் கைவிட்ட சசிகலா குடும்பம்: தண்டனை காலம் முடிந்தும் சிறையில் தவிக்கும் சுதாகரன்

ரூ.10 கோடி அபராதம் செலுத்தாமல் கைவிட்ட சசிகலா குடும்பம்: தண்டனை காலம் முடிந்தும் சிறையில் தவிக்கும் சுதாகரன்
Updated on
2 min read

சொத்துக் குவிப்பு வழக்கில் சுதாகரனின் தண்டனை முடிந்தும் ரூ.10கோடி அபராதம் செலுத்த முடியாததால் அவர் சிறையிலேயே தனிமையில் தவிக்கிறார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய மூவரும் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சரணடைந்தனர். சசிகலாவும், இளவரசியும் கடந்த நவம்பரில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தினர். இதையடுத்து சசிகலா ஜனவரி 27-ம் தேதியும், இளவரசி பிப்ரவரி 5-ம் தேதியும் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆனால் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனும், சசிகலாவின் அக்கா மகனுமான சுதாகரன் மட்டும் இன்னும் சிறையில் இருக்கிறார். அவர் இவ்வழக்கில் 1996-ல்தமிழக சிறையில் 92 நாட்கள் இருந்ததால், அவரது சிறை தண்டனைக் காலம் கடந்த செப்டம்பரில் நிறைவடைந்தது. ஆனால் ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதத்தை செலுத்தாததால் அவர் விடுதலை செய்யப்படவில்லை.

ஆடம்பரத்தால் நேர்ந்த ஆபத்து

சுதாகரனுக்கு நெருக்கமான உறவினர் ஒருவர் கூறும்போது, "சசிகலா மூலம் ஜெயலலிதாவுக்கு அறிமுகமான சுதாகரன் அவரதுவளர்ப்பு மகனாகவும் ஆனார். அவருக்கு தமிழகமே மிரளும் அளவுக்கு பல கோடி ரூபாயை செலவழித்து ஆடம்பர திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அதுவே வினையாக மாறி சுதாகரனை சிறைக்குள் தள்ளிவிட்டது.

சுதாகரன் தனது பெயரில் நற்பணி மன்றங்களை தொடங்கியதும் ’சின்ன எம்ஜிஆர்’ ஆக வலம் வந்ததும் ஜெயலலிதாவுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவரது கோபத்துக்கு ஆளானார். அவரை அதிமுகவில் இருந்து ஓரம்கட்டிய ஜெயலலிதா, தனது இல்லத்தில் இருந்தும் வெளியேற்றினார். அதேபோல அவரது சகோதரரான டிடிவி தினகரன் உள்ளிட்டோரும் சுதாகரனைஒதுக்கினர். ஆனால் சசிகலா தன்னால் பிரச்சினைக்கு ஆளானதால் சுதாகரன் மீது பாசம் காட்டினார். சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்கான செலவையும் கவனித்துக்கொண்டார்.

ஆனால் சிறைக்கு வந்த பிறகு சுதாகரனோடு முற்றிலும் தொடர்பு இல்லாமல் போய் விட்டது. கடந்த 4 ஆண்டு காலமாக பரப்பன அக்ராஹா சிறையில் சுதாகரனுக்கு எவ்வித சலுகையும் செய்து தரவில்லை. மாதத்துக்கு இரு முறை சசிகலாவையும் இளவரசியையும் சிறைக்கு போய்பார்த்த உறவினர்கள் சுதாகரனைபார்க்கவில்லை. அவரது மனைவியும் பிள்ளைகளும்கூட ஒரு முறை போய் பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர்.

இதனால் மனம் உடைந்த சுதாகரன் உளவியல் ரீதியாகவும் வெகுவாக பாதிக்கப்பட்டார்.

எந்த உறவால் ஆடம்பரமும் அதிகாரமும் கிடைத்ததோ, அதேஉறவால் அவருக்கு தண்டனையும் கிடைத்துவிட்டது. எந்த உறவினரால் தண்டனைக்கு ஆளானாரோ, அவர்களே அவரை கைவிட்டு விட்டனர். ஏராளமான சொத்துக்களை வைத்துள்ள சசிகலா குடும்பத்தினருக்கு 10 கோடி ரூபாய் எல்லாம் பெரிய விஷயமே அல்ல. இதில் டிடிவி தினகரனும் பாஸ்கரனும் கூட தன் சகோதரரை ஏன் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள் என தெரியவில்லை. சுதாகரன் இவ்வழக்கில் அப்ரூவர் ஆகாமல் யாருக்காக எல்லா தண்டனையையும் அனுபவித்தாரோ, அவர்களே அபராதம் செலுத்தி சுதாகரனின் விடுதலைக்கும் உதவி செய்ய வேண்டும்" என கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in