26 நாட்களில் 70 லட்சம் கோவிட் தடுப்பூசிகள் : உலகளவில் இந்தியா சாதனை

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக 70 லட்சம் தடுப்பூசிகளை செலுத்தி உலகளவில் வேகமான நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது.

இந்தியா வெறும் 26 நாட்களில் இந்த எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை வழங்கியுள்ள போது, அமெரிக்கா 27 நாட்களிலும், இங்கிலாந்து 48 நாட்களிலும் இந்த எண்ணிக்கையை அடைந்தன. சில நாட்கள் முன்பு 60 லட்சம் தடுப்பூசிகள் என்ற அளவை வேகமாக அடைந்த நாடு என்ற சாதனையை இந்தியா படைத்திருந்தது.

பிப்ரவரி 11, 2021 காலை 8 மணி வரை, தமிழகத்தில் 1,97,392 பேர், புதுச்சேரியில் 4,770 பேர் உட்பட, நாடு முழுவதும் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு (70,17,114) கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

57,05,228 சுகாதாரப் பணியாளர்களுக்கும், 13,11,886 முன்கள ஊழியர்களுக்கும் 1,43,056 முகாம்களில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

13 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பதிவு செய்த 65 சதவீதத்திற்கும் அதிகமான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 79% பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

7 மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் 40 சதவீதத்திற்கும் குறைவான சுகாதாரப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறைந்தபட்சமாக புதுச்சேரியில் 17.5 சதவீதம் பயனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மேலும் சில குறிப்பிடத்தக்க வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. 17 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கடந்த 24 மணி நேரத்தில் எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை.

தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,42,562 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 12,923 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 11,764 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.26 சதவீதமாக உயர்ந்து, உலகளவில் அதிகமாக உள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,73,372 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,980 பேரும், மகாராஷ்டிராவில் 3,451 பேரும், தமிழ்நாட்டில் 479 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 108 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in