பிரதமர் மோடி கரோனா தடுப்பூசியை வெளிப்படையாகப் போட்டுக்கொள்ள வேண்டும்: தயாநிதி மாறன் எம்.பி. வேண்டுகோள்

பிரதமர் மோடி : படம் உதவி | ஏஎன்ஐ.
பிரதமர் மோடி : படம் உதவி | ஏஎன்ஐ.
Updated on
1 min read

பிரதமர் மோடி கரோனா தடுப்பூசியை வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வகையில் போட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் என்று திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட் 2021-22 குறித்து மக்களவையில் நேற்று விவாதம் நடந்தது. அப்போது திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசுகையில், “மத்திய அரசு கொண்டு வந்துள்ள கரோனா தடுப்பூசி மீது பலருக்கும் நம்பிக்கையில்லை. ஆதலால், மக்களுக்கு ஏற்படும்வகையில் பிரதமர் மோடி கரோனா தடுப்பூசியை வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வகையில் போட்டுக்கொள்ள வேண்டும்.

பிரதமர் மோடி மட்டுமல்லாது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வகையி்ல கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

அவ்வாறு மக்கள் பார்க்கும் வகையில் இவர்கள் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டால், இந்தத் தடுப்பூசி மீதான அச்சம் விலகி, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அந்தத் தடுப்பூசியின் செயல்திறன் மீதும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெளிப்படையாக மக்கள் பார்க்கும் வகையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். அதேபோல பிரிட்டன் இளவரசர் பிலிப், பிரதமரின் நல்ல நண்பரான இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரும் மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார்கள்.

நம்முடைய பிரதமர் மோடி அமெரிக்க மாதிரியை விரும்பக்கூடியவர் என நினைக்கிறேன். ஆதலால், பிரதமர், குடியரசுத் தலைவர், பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் ஆகியோர் வெளிப்படையாக கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன்வர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in