Published : 11 Feb 2021 03:12 AM
Last Updated : 11 Feb 2021 03:12 AM

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க ட்ரோன், மோப்ப நாய் மூலம் தேடும் பணி தீவிரம்

உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க ஆளில்லாத விமானங்கள், மோப்ப நாய்கள் மூலம் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டம் ஜோஷிமத் அருகே பனிப்பாறையில் வெடிப்பு ஏற்பட்டு உடைந்ததில் தவுலிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தின் காரணமாக இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த 2 நீர்மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த 200-க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதையடுத்து இந்தோ-திபெத்திய எல்லைப் பிரிவு போலீஸார் (ஐடிபிபி), தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை பிரிவினர் ஆகியோர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதுவரை 16 பேர் உயிருடன்மீட்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கில் சிக்கி 34 பேர் இறந்துவிட்டனர். அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 170 பேர்கதி என்னவென்று தெரியவில்லை.

இதனிடையே தபோவன் நீர் மின் நிலைய சுரங்கப்பகுதியில் சிக்கியுள்ள 35 பேரை மீட்கும் பணி தொடர்ந்து 4-வது நாளாக நேற்று நடைபெற்றது. 1.7 கிலோமீட்டர் தூரமுள்ள அந்த சுரங்கத்துக்கு உள்ளே தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். சுரங்கத்தின் வாயில் பகுதியில் இருந்த சேறு, சகதி, இடிபாடுகள், பாறைகளை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அகற்றியுள்ளனர். சுமார் 150 மீட்டர்தூரத்துக்கு இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு மேல்சுரங்கத்துக்கு உள்ளே செல்ல முடியாதபடி சேறு, சகதி நிறைந்துள்ளது.

இதையடுத்து தொழிலாளர்கள் எங்கு சிக்கியுள்ளனர் என்பதை அறிவதற்காக மோப்பநாய்கள், ட்ரோன் விமானங்களை பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த தபோவன் சுரங்கப் பகுதியில் தேடுதல் பணிக்காக மோப்ப நாய்கள், ஆளில்லாத விமானங்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நேற்று நடைபெற்றன.

இதுகுறித்து மாநில பேரிடர் மீட்புப் படையின் துணை டிஜிபி ரிதிம் அகர்வால் கூறும்போது, “தற்போது ஆளில்லாத விமானங்கள், மோப்ப நாய்களைக் கொண்டுதேடுதல் வேட்டையை நடத்தி வருகிறோம். ஆளில்லாத விமானங்கள் மூலம் தெர்மல் மற்றும் லேசர் ஸ்கேன் கொண்டு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது. அதுமட்டுமல்லாமல் ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் வேட்டை நடைபெறுகிறது” என்றார்.

சுரங்கப் பகுதியில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை உத்தராகண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் நேற்று முன்தினம் மாலை பார்வையிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x