

நேபாளம், இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருப்பது ஏன் என்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயராத போதிலும், சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரம் நேற்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்டது.
மாநிலங்களவையில் சமாஜ்வாதி எம்.பி. விஷாம்பர் பிரசாத் நிஷாத் பேசும்போது, “அன்னை சீதா பிறந்த நேபாளத்திலும் ராவணனின் இலங்கையிலும் பெட்ரோல், டீசல் விலை குறைவாக உள்ளது. அந்த வகையில் ராமர் பிறந்த இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா?” என சமூக வலைதளங்களில் உலவும் தகவலை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறும்போது, “பெட்ரோல், டீசலை குறைவாக பயன்படுத்தும் மக்களைக் கொண்ட நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுவது தவறு. மாறாக, நம் நாட்டின் எரிபொருள் விலையை பெரிய பொருளாதார நாடுகளுடன் ஒப்பிட வேண்டும். பொதுவாக அதிகமாக நுகரப்படும் பொருட்கள் விலை அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, இந்தியாவில் மண்ணெண்ணெய் ஒரு லிட்டர் ரூ.32-க்கு கிடைக்கிறது. ஆனால், நேபாளம், வங்கதேசத்தில் ரூ.57 முதல் ரூ.59 வரை விற்கப்படுகிறது” என்றார்.