

கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் நாற்காலியில் நான் அமர்ந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய குற்றச்சாட்டு தவறானது. நான் தாகூர் நாற்காலியில் அமரவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா, அண்மையில் மேற்கு வங்க மாநிலம், சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துக்குச் சென்றிருந்தார். அப்போது, ரவீந்திரநாத் தாகூரின் நாற்காலியில் அமித் ஷா அமர்ந்துஅந்த நாற்காலிக்கு அவமரியாதையை ஏற்படுத்திவிட்டார் என்று மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் குற்றம்சாட்டினார்.
இதுதொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பேசும்போது, “இந்தஅவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிகூறிய குற்றச்சாட்டு தவறானது. அவைக்கு தவறான தகவல்களை சவுத்ரி தருகிறார்.
நான் ரவீந்திரநாத் தாகூர் நாற்காலியில் அமரவில்லை. இதற்கு ஆதாரமாக சாந்திநிகேதன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எழுதிய கடிதம் உள்ளது. அக்கடிதத்தில், அந்த நினைவுச்சின்னத்துக்கு செல்வோர் அமர்ந்து தங்கள் எண்ணங்களை எழுதுவதற்காக போடப்பட்டுள்ள ஜன்னலோர நாற்காலியில்தான் நான்அமர்ந்தேன் என எழுதப்பட்டுள்ளது. தாகூரின் நாற்காலியில் முன்னாள் பிரதமர் நேரு அமர்ந்திருக்கிறார். மேலும் அவரது சோஃபாவில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி அமர்ந்து தேநீர் குடித்திருக்கிறார்” என்றார்.
மேலும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் குற்றச்சாட்டு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார்.
இதனிடையே விஸ்வபாரதி பல்கலைக்கழக துணைவேந்தர், ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
துரதிருஷ்டவசமாக உங்களுக்கு (சவுத்ரி) தவறான தகவல்களை யாரோ சிலர் தந்துள்ளனர். இங்கு வந்திருந்த முன்னாள் பிரதமர் நேரு, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரதிபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா உள்ளிட்டோர் ஜன்னலோரம் அமைக்கப்பட்டுள்ள வேறு நாற்காலியில்தான் அமர்ந்திருக்கின்றனர். இதற்கு புகைப்பட ஆதாரங்கள் உள்ளன.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.