

லடாக்கில் பாங்காங் ஏரியின் தெற்குகரையில் உள்ள மலைகளில் இருந்து இந்தியாவும் சீனாவும்குறைந்த அளவில் படைகளை விலக்கிக்கொள்ளும் நடவடிக்கையை நேற்று தொடங்கின.
லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய – சீனவீரர்கள் இடையே கடந்த ஆண்டுஜூன் 25-ம் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியவீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனத் தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்தது. இரு நாடுகளும் எல்லை நெடுகிலும் படைகளை குவித்தன.
இதனால் ஏற்பட்ட போர் பதற்றத்தை தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதில் 9-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஜனவரி 24-ம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில் லடாக்கில் பாங்காங் ஏரியின் தெற்கு கரையில் உள்ள மலைகளில் இருந்து பீரங்கிகள், கவச வாகனங்களுடன் நிலை கொண்டிருந்த படையினரை இரு நாடுகளும் பகுதி அளவில் திரும்பப் பெறத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிழக்கு லடாக்கில் இந்திய – சீனவீரர்கள் இடையே மோதல் ஏற்படும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த படைக்குறைப்பு குறித்த தகவல், சீனப் பாதுகாப்பு அமைச்சக இணைய தளத்தில் நேற்று வெளியானது. இதில் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வூ கியான், “பாங்காக் ஏரிப் பகுதியிலிருந்து இந்திய – சீன ஆயுதப் படைகளின் முன்களப் பிரிவுகள் பிப்ரவரி 10-ல் வெளியேறத் தொடங்கியுள்ளன. இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் அளவிலான 9-வது சுற்று பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட ஒருமித்த கருத்தின் அடிப்படையில் படைக்குறைப்பு தொடங்கியுள்ளது. இரு நாடுகளும் ஒரே நேரத்திலும் முறையாகவும் படைகளை குறைத்து வருகின்றன” என்று கூறியுள்ளார்.
படைக்குறைப்பு தொடர்பாக விரிவான தகவல்களை சீன பாதுகாப்பு அமைச்சகம் பகிர்ந்து கொள்ளவில்லை.
மேலும் இந்த படைக்குறைப்பு குறித்து டெல்லியில் பாதுகாப்பு அமைச்சகமோ அல்லது வெளியுறவு அமைச்சகமோ அறிக்கை வெளியிடவில்லை. என்றாலும் பாங்காங் ஏரிப் பகுதியில் படைக்குறைப்பு நடைபெறுவதை அரசின்உயரதிகாரிகள் நேற்று உறுதி செய்தனர். ஆனால் இது தொடர்பான விவரங்களை அவர்கள் பகிர்ந்துகொள்ள மறுத்துவிட்டனர்.