

ராணுவத்தில் உள்நாட்டுத் தளவாடங்களின் பயன்பாடு இன்னும் 5 ஆண்டுகளில் 70 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் கூறினார்.
பாரத் சக்தி என்ற பெயரில் சமீபத்தில் இணையதளம் தொடங்கியுள்ள பிரபல பாதுகாப்பு நிபுணர் நிதின் கோகலேவுக்கு மனோகர் பாரிக்கர் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது:
நமது நாட்டுக்குத் தேவையான ராணுவ தளவாடங்களில் 70 சதவீதம் தற்போது இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் ஆண்டுதோறும் 10 சதவீத அளவுக்கு குறைத்து, அதற்கு பதிலாக உள்நாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த முடியும். இவ்வாறு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு தலா 10 சதவீத அளவுக்கு இறக்குமதியை குறைப்பதன் மூலம் உள்நாட்டு ராணுவ தளவாடங்களின் பயன்பாடு 70 சதவீதமாக அதிகரிக்கும்.
ராணுவத் தளவாடங்களில் இறக்குமதி உள்நாட்டுப் பொருட்களின் விகிதம் தற்போது 70:30 ஆக உள்ள நிலையில், அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளில் இது தலைகீழாக மாறும்.
இது தொடர்பாக தெளிவான வழிகாட்டுதல் ஆயுதப் படை களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத் துக்கு முன்னுரிமை தரவேண்டும், உள்நாட்டுப் பொருள்களின் பயன் பாட்டை அதிகரித்து, இறக்கு மதியை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.
70 சதவீத தளவாடங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 90 ஆயிரம் கோடி செலவிடப்படும் நிலையில், அதை படிப்படியாக உள்நாட்டுக்கு திருப்பிவிடும்போது, இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் மிகப்பெரிய ஊக்குவிப்பை பெறும். இவ்வாறு மனோகர் பாரிக்கர் கூறினார்.