Last Updated : 10 Feb, 2021 02:41 PM

 

Published : 10 Feb 2021 02:41 PM
Last Updated : 10 Feb 2021 02:41 PM

2015 முதல் 2019-ம் ஆண்டுவரை 6.70 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனர்: மத்திய அரசு தகவல்

2015-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டுவரை 6.70 லட்சம் பேர் இந்தியக் குடியுரிமையை வேண்டாம் என்று கைவிட்டுள்ளனர் என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் எழுப்பிய கேள்வியில், “வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களில் எத்தனை பேர் கடந்த 5 ஆண்டுகளில் தாங்கள் வசிக்கும் நாட்டின் குடியுரிமையைப் பெற இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளார்கள்” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதிலில், “2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் மொத்தம் 6.70 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டுள்ளனர்.

மத்திய வெளியுறவுத் துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, கடந்த 2015-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 656 பேரும், 2016-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 942 பேரும் இந்தியக் குடியுரிமையை வேண்டாம் எனக் கைவிட்டனர்.

2017-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 905 பேரும், 2018-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 130 பேரும், 2019-ம் ஆண்டில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 441 பேரும் இந்தியக் குடியுரிமையைக் கைவிட்டனர்.

சமீபத்தில் கிடைத்த தகவலின்படி, வெளிநாடுகளில் ஒரு கோடியே 24 லட்சத்து 99 ஆயிரத்து 395 இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இரட்டைக் குடியுரிமை வழங்குவது குறித்து எந்தவிதமான பரிசீலனையிலும் மத்திய அரசு இல்லை. வெளிநாடுகளில் வசிக்கும் பதிவுபெற்ற இந்தியர்கள் 36 லட்சத்து 99 ஆயிரத்து 476 பேர் வசிக்கின்றனர்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x