மேற்கு வங்கத்தைச் சுடுகாடாக்க பாஜகவை அனுமதிக்க மாட்டேன்: மம்தா பானர்ஜி காட்டம்

புருத்வானில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ.
புருத்வானில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ.
Updated on
2 min read

பாஜக இந்த நாட்டைச் சுடுகாடாக்கிவிட்டது. அதேபோன்று மேற்கு வங்க மாநிலத்தைச் சுடுகாடாக்க நான் அனுமதிக்க மாட்டேன். மக்கள் நிச்சயம் பாஜகவை வெளியேற்றுவார்கள் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் திரிணமூல் காங்கிரஸ் முயன்று வருகிறது.

மம்தாவின் ஆட்சியை அகற்றிவிட்டு தங்கள் ஆட்சியை முதன்முதலாக நிறுவ பாஜக திட்டமிட்டு வருகிறது. இதற்கிடைய காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி அமைத்து காய் நகர்த்தி வருகிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தில் இப்போது இருந்தே தேர்தல் பரபரப்பு தொற்றிவிட்டது.

புருத்வான் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''சில மோசமான மாடுகள் தங்கள் தவறுகளை மறைப்பதற்காக திரிணமூல் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிவிட்டன. அந்தக் கெட்ட சக்திகள் வெளியேறியது நல்லதுதான். திரிணமூல் காங்கிரஸ் நலனுக்காகச் சிந்திக்காதவர்கள், கட்சியில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஒரு தாய் தனது குழந்தைகளுக்குப் பாலூட்டி, உணவு கொடுத்து அவர்களை வளர்த்தார். ஆனால், அந்தத் தாய் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டபோது, அவருக்குத் தேவையானபோது, அவருடன் இல்லாமல் பறந்து சென்ற குழந்தைகள் நல்ல குழந்தைகள் அல்ல. துரோகம் செய்த குழந்தைகள்.

பாஜகவுக்கு இந்தத் தேர்தலில் வெளியே செல்வதற்கான கதவுகளை மக்கள் திறந்து விடுவார்கள் என்று நம்புகிறேன். இந்திய தேசத்தைச் சுடுகாடாக பாஜக அரசு மாற்றிவிட்டது. இனிமேல் மேற்கு வங்கத்தையும் அதேபோன்று மாற்ற முயல்கிறார்கள். மேற்கு வங்க மாநிலத்தைச் சுடுகாடாக மாற்ற அனுமதிக்க மாட்டேன்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

முர்ஷிதாபாத்தில் நடந்த மற்றொரு பொதுக்கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்றார்.

அதில் அவர் பேசியதாவது:

''நான் பலவீனமானவள் அல்ல; வலிமையாவள். தலைநிமிர்ந்து நடந்து, நீண்டகாலம் வாழ்வேன். வங்கப் புலி போன்று தலைநிமிர்ந்து, துணிச்சலாக நடப்பேன்.

வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நிலத்தை பாஜக அபகரிக்க முயல்கிறது. கடைசியில் விவசாயிகளிடம் ஒன்றும் மிஞ்சாது. விவசாயிகள் பயிரிடுவார்கள், விளைவிப்பார்கள். ஆனால், அவர்களிடம் இருந்து அனைத்தையும் எடுத்துவிடுவார்கள்.

உங்கள் பயிர்களை பாஜகவினர் எடுக்க வரும்போது, விவசாயிகள் ஏதும் தரக்கூடாது. நீங்களே பயிரை விளைவியுங்கள், அதிலிருந்து கிடைக்கும் உணவைச் சாப்பிடுங்கள் எனச் சொல்லுங்கள்''.

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in