

அரசியல் சார்புகள் இன்றி பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருமித்த குரலில் பேச வேண்டும், இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக சமூக இயக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அவர் உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
துருக்கியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் அவர் இது குறித்து கூறும்போது, “மதத்தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் ஆகியோரை ஈடுபடுத்தி பயங்கரவாதத்துக்கு எதிராக சமூக இயக்க ஒன்றை உருவாக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்களை மையப்படுத்தி இந்த இயக்கம் செயல்பட வேண்டும்.
பயங்கரவாதத்தை ஆதரித்து ஊக்குவிப்பவர்களை தனிமைப்படுத்தி நமது மனித நேயவாத மதிப்புகளை பகிர்ந்து கொள்பவர்களுடன் நாம் ஒன்றிணைய வேண்டும்.
பயங்கரவாதத்தின் உத்திகள் மாறிக் கொண்டே வருவதால் நம்மிடம் அதனுடன் சண்டையிட ஒட்டுமொத்தமான உத்திகள் ஏதுமில்லை. அதனால் நாம் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறைகளில் அதனை எதிர்கொண்டு வருகிறோம்.
பயங்கரவாத குழுக்களிடையே வேறுபாடு பார்க்கக் கூடாது. உலகம் ஒரே குரலில் பேசி, ஒருமித்த முறையில் தீவிரவாதத்தை முறியடிக்க ஒன்றிணைதல் அவசியம். இதில் பாரபட்ச போக்குகளோ, அரசியல் சார்புகளோ கூடாது.
பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் சென்றடையும் வழியை நாம் அடைக்க வேண்டும். பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்வது குற்றமாக்கப்பட வேண்டும்.
இந்தச் சவாலை கையாள்வதில் ஐ.நா.வுக்கு தொலைநோக்கு அணுகுமுறையும், வலுவான பங்கும் இருக்கிறது” என்றார் நரேந்திர மோடி.