Published : 10 Feb 2021 03:14 AM
Last Updated : 10 Feb 2021 03:14 AM

நீர் நிரம்பிய சுரங்கத்திலிருந்து உயிர் தப்பியது எப்படி? - உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கி மீண்ட தொழிலாளர்கள் பேட்டி

நீர் நிரம்பிய சுரங்கப்பகுதியிலிருந்த உயிர் தப்பியது எப்படி என்பது குறித்து ரிஷி கங்கா நீர் மின்த் திட்ட தொழிலாளர்கள் விளக்கியுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் சமோலிமாவட்டம் ஜோஷிமத் அருகே ரிஷிகங்கா பகுதியில் நீர்மின்திட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த ஞாயிற்றுக்கிழமை பனிப்பாறை உடைந்து தவுலிகங்கா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த நீர் மின் நிலையங்கள் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 200 பேருக்குமேல் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில் இதுவரை 31 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. நேற்று முன்தினம் வரை 16 பேர் மீட்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தபோவன் பகுதியில் உள்ள நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கிய 39 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர், இந்தோ திபெத்திய எல்லை போலீஸார் (ஐடிபிபி) ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுரங்கத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் சிலரைமீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உயிர் தப்பிய 28 வயது தொழிலாளி ராஜேஷ் குமார் என்பவர் கூறும்போது, “கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமார் 160 பேர் நீர்மின் நிலையகட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 39 பேர் சுரங்கப் பகுதியில் சிக்கிக்கொண்டனர். உயிர் பயம் காரணமாக தண்ணீர் சூழாத இடத்தில்பாறைகள் மேல் ஏறி நின்றுகொண்டோம். ஆனால் உயிர்பிழைப்போம் என்று சிறிது கூட எண்ணவில்லை. செல்போன் சிக்னல்களும் கிடைக்கவில்லை.

இருந்தபோதும் எங்களுக்குஅடிக்கடி விசில் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. அதனால் நாங்கள் காப்பாற்றப்படுவோம் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தோம். அப்போது ஒரு இடைவெளிதெரிந்து ஒரு சில தொழிலாளிகளுக்கு செல்போன் சிக்னல் கிடைத்தது. பின்னர் பல மணி நேரப் போராட்டத்துக்குப் பின்னர் ஒருவழியாக மீட்புக் குழுவினர் ஒரு சிறிய துளையை ஏற்படுத்தி அதன் வழியாக எங்களை மீட்டனர். நாங்கள் உயிர்பிழைத்தது அதிசயம்தான்” என்றார்.

உயிர்தப்பிய மற்றொரு தொழிலாளர் நெகி கூறும்போது, “தண்ணீர் சூழ்ந்து சுரங்கத்தில் சிக்கியபோது அங்கு ஒரே தூசு மண்டலமாக இருந்தது. சேறு, சகதிகள் இடையே சிக்கிக் கொண்டோம். அனைவரும் உயிர் பயத்தில் கதறிக் கொண்டிருந்தனர். நிச்சயம் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். கடவுள் அருளால் தப்பித்தோம்” என்றார்.

காப்பாற்றப்பட்ட தொழிலாளர் மங்க்ரா என்பவர் கூறும்போது, “3 நாட்கள் சுரங்கத்திலேயே சிக்கியிருந்தோம். இன்னும் எனக்குதூக்கம் வரவில்லை. நான் காண்பதுகனவா, நிஜமா என்பதும் புரியவில்லை. தண்ணீர் எங்களை சூழும்போது மலை உடைந்து பூமி நகர்ந்துவிட்டது என்று நினைத்தோம். பூகம்பம் வந்திருக்கலாம் என்றும் அஞ்சினோம். ஒரு வழியாக தப்பித்து விட்டோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x