

பெங்களூருவில் இருந்து சென்னை வரை சசிகலாவுக்கு வழிநெடுக தொண்டர்கள் கொடுத்த உணர்ச்சி மிகு வரவேற்பால் ஏற்பட்ட சவால்களை சமாளித்து சுமார் 22 மணி நேரம் காரை ஓட்டிய ஓட்டுநர் பிரபு கவனத்தை ஈர்த்துள்ளார்.
சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் விடுதலையான சசிகலா நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு பெங்களூருவில் உள்ள தேவனஹள்ளியில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார். சொகுசுவிடுதியின் வாசலில் இருந்து மறுநாள் காலை 4 மணிக்கு சென்னை ஹபிபுல்லா சாலையில் உள்ள விஷ்ணு பிரியாவின் வீட்டில் நுழையும் வரை சசிகலாவுக்கு தொண்டர்கள் வழிநெடுக வரவேற்பு கொடுத்தனர்.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் சென்ற போதுஇரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் சசிகலாவின் வாகனத்தை பின்தொடர்ந்து வந்து ‘செல்பி' எடுத்தார். இதனால் தனியார் மெய்காப்பாளர்களும், உறவினர்களின் வாகனங்களும் சசிகலா வாகனத்தை சூழ்ந்தவாறு அணிவகுத்தனர். இந்த சவாலான சூழலில் எல்லா விதமான சிரமங்களையும் கடந்து நிதானமாகவும் நேர்த்தியாகவும் காரை இயக்கிய ஓட்டுநர் பிரபு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
ஜெயலலிதாவின் ஓட்டுநராக 25 ஆண்டுகள் பணியாற்றிய பிரபு, பல்வேறு சவாலான சூழல்களில் வாகனம் ஓட்டிய அனுபவம் வாய்ந்தவர். அதனாலேயே சசிகலா தனது சென்னை பயணத்துக்கு ஓட்டுநராக பிரபுவை நியமித்துள்ளார். சாதாரணமாக பெங்களூரு வில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சென்னைக்கு காரில் பயணித்தால் 5 முதல் 6 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.
ஆனால் சசிகலாவுக்கு வழிநெடுகிலும் அமமுக, அதிமுக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களின் உணர்ச்சி மிகு வரவேற்பால் சென்னையை வந்தடைய சுமார் 22 மணி நேரம் ஆனது.
அதிமுக கொடி விவகாரத்திற்காக சசிகலா காரை மாற்றினாலும், ஓட்டுநரை மாற்றவில்லை. எத்தனை பேர் கார் முன்னால் விழுந்தாலும், எவ்வித அசாம்பாவிதமும் ஏற்படாதவாறு கச்சிதமாக காரை ஓட்டியுள்ளார் பிரபு. இதனால் சசிகலாவின் குடும்பத்தினரும், ஆதரவாளர்களும் பிரபுவை பாராட்டியுள்ளனர். இதனிடையே பிரபுவின் படம் சமூக வலைத் தளங்களில் வெளியாகி, வர வேற்பை பெற்றுள்ளது.