நிதிஷின் புதிய அமைச்சரவை: லாலு கட்சிக்கு அதிக அமைச்சர்கள், காங்கிரஸும் இடம்பெற வாய்ப்பு

நிதிஷின் புதிய அமைச்சரவை: லாலு கட்சிக்கு அதிக அமைச்சர்கள், காங்கிரஸும் இடம்பெற வாய்ப்பு
Updated on
2 min read

நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் அவரது கட்சியை விட அதிகமான அமைச்சர்கள் லாலு பிரசாத் கட்சியில் இருந்து இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் காங்கிரஸும் இடம் பெறும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்ற மெகா கூட்டணியில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் 71-ஐ விட அதிகமாக அதன் கூட்டணிக்கட்சியான லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்திற்கு 80 கிடைத்திருந்தது. இதனால், தம் கட்சியின் எம்.எல்.ஏக்களை விட அதிகமானவர்களை லாலுவின் கட்சியில் தேர்ந்தெடுத்து அமைச்சர்களாக்க முடிவு செய்துள்ளார் நிதிஷ்குமார். மொத்தம் 36 அமைச்சர்களுடன் அமைக்கப்படுவதாகக் கூறப்படுவதில் லாலுவின் கட்சியினர் 16 மற்றும் நிதிஷின் கட்சியினர் 15 பேர்களும் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீதியுள்ள ஐந்து, 27 எம்.எல்.ஏக்கள் பெற்ற கூட்டணி உறுப்பினரான காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் எனக் கருதப்படுகிறது. இதை ஏற்பது குறித்து இன்னும் முடிவு எடுக்காத காங்கிரஸ், சபாநாயகர் பதவி பெற முயற்சிப்பதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் பிஹார் மாநிலக் காங்கிரஸ் தலைவர் அசோக் சௌத்ரி கூறுகையில், ‘தீபாவளி முடித்த பின் நான் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச இருக்கிறேன். இதில், பிஹார் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் நியமிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படும்.’ எனக் கூறுகிறார்.

கடந்த இருமுறை நடைபெற்ற ஆட்சியிலும் ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த உதய் நாரயண் சௌத்ரி, கயா மாவட்டத்தின் இமாம்கன்ச்சில் போட்டியிட்டு முன்னாள் முதல் அமைச்சரும் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சாவின் தலைவருமான ஜிதன்ராம் மாஞ்சியிடம் தோற்று விட்டார். எனவே, இந்த பதவிக்கும் புதியவரை தேர்ந்தெடுக்கபடும் நிலை உருவாகி உள்ளது. இதுவும் காங்கிரஸுக்கு அளிக்கப்பட உள்ளதாகவும் ஐக்கிய ஜனதா தள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லாலுவுடன் தேர்தல் கூட்டணியாக நித்திஷ் சேர்ந்தது முதல் கிளம்பி வரும் துணை முதல் அமைச்சர் பதவி இந்த முறை அமர்த்தப்பட மாட்டாது எனக் கூறப்படுகிறது. இந்த பதவி உறுதியாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த லாலுவின் இளைய மகன் தேஜஸ்வீ பிரசாத் யாதவிற்கு கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராகப் பதவி அமர்த்தப்படுவார் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ‘தி இந்து’விடம் லாலு கட்சியின் நிர்வாகிகளில் சிலர் பேசுகையில், ’அமைச்சரவை அமர்த்துவதில் நித்திஷுக்கு முழுச் சுதந்திரம் அளித்துள்ளார் லாலுஜி. முதல் முறையாக ஒரு எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டு வென்ற தன் மகன்களுக்கு எடுத்தவுடன் துணை முதல் அமைச்சர் பதவி அளிக்கப்படுவதையும் அவர் விரும்பவில்லை. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கட்சியின் மீது தவறாக செய்தியை பரப்பி விடும் எனக் கருதுவது காரணம்.’ எனக் கூறுகின்றனர்.

நிதிஷுக்கு முன்பாக பிஹாரில் இருந்த லாலு கட்சியின் ஆட்சியில் கூட்டணியாக காங்கிரஸ் இடம் பெற்றிருந்தது. அப்போது அக்கட்சிக்கு அமைச்சரவையில் இடம் அளித்திருந்தார் லாலு என்பது நினைவு கூறத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in