Last Updated : 09 Feb, 2021 05:09 PM

 

Published : 09 Feb 2021 05:09 PM
Last Updated : 09 Feb 2021 05:09 PM

ஐஐடியின் முனைவர் பட்டத்திற்கான இடஒதுக்கீட்டில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு அநீதி: சு.வெங்கடேசன் புகார்

புதுடெல்லி

ஐஐடியின் முனைவர் பட்டத்திற்கான இடஒதுக்கீட்டில் ஒ.பி.சி, எஸ்.சி, எஸ்டி மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக சிபிஎம் எம்.பி. சு.வெங்கடேசன் புகார் கூறியுள்ளார்.

இதை அவரது கேள்விக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் இன்று மக்களவையில் அளித்த பதிலின் அடிப்படையில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

ஐஐடி முனைவர் பட்டத்திற்கான சேர்க்கையில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர்க்கான இட ஒதுக்கீடு பற்றி எனது கேள்விக்கு கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்துள்ள பதில் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

இதில், பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர், இதர பிற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை, அப்பிரிவுகளுக்குரிய இட ஒதுக்கீடு சதவீதங்களை விட மிகக் குறைவாக உள்ளது.

இந்தியாவின் 23 ஐஐடி மொத்தம் 7186 மாணவர்கள் 2020 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இம் மாணவர்களில் ஓ.பி.சி பிரிவினர் 1635, பட்டியல் சமூகம் 707, பழங்குடியினர் 321 என அமைச்சர் எழுத்துமூலம் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளார். .

பட்டியல் சமூகத்தினர் சதவீதம் குறைந்த பட்சம் 1077 மாணவர்களுடன் 15 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு முனைவர் பட்ட அனுமதிகளில் 370 மாணவர்கள் குறைவாக இருப்பது 9.83 சதவிகிதம் மட்டுமே.

நாட்டிலுள்ள 23 ஐஐடிக்களில் கோவா, தன்பாத், ரூர்கி ஆகிய மூன்றைத் தவிர மற்ற 20 ஐஐடிக்களிலும் அனுமதிக்கப்பட்ட இப்பிரிவு மாணவர் எண்ணிக்கை, உரிய இட ஒதுக்கீடு சதவீதத்தை விட குறைவாக இருக்கிறது.

சென்னை ஐஐடியிலும் 9.41 சதவீதம் மட்டுமே பட்டியல் சாதி மாணவர்க்கு இடம் கிடைத்துள்ளது. பழங்குடி மாணவர்கள் இட ஒதுக்கீட்டில் குறைந்த பட்சம் 7.5 சதவீத இடங்களைப் பெற வேண்டும்.

ஆனால் 2020 ல் 4.46 சதவீத பழங்குடி மாணவர்களே இடம் பெற்றுள்ளனர். ஐஐடி மும்பை மற்றும் ரூர்கி தவிர மற்ற 21 ஐஐடிக்களிலும் உரிய சதவீதம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

மேலும் அதிர்ச்சி அளிப்பது என்னவெனில் காந்தி நகர் ஐஐடியில் 124 பேர் முனைவர் பட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு பழங்குடி மாணவர் கூட அதில் இல்லை.

இதேபோல், ரோபார், திருப்பதி மற்றும் பாலக்காடு ஆகிய ஐஐடிக்களில் 186 மொத்த மாணவர் அனுமதியில் ஒரு பழங்குடி மாணவர் கூட இல்லை.

பழங்குடியினருக்கான 15 சதவீதம் நிரப்பப்பட்டிருந்தால் குறைந்த பட்சம் 538 மாணவர்களுக்கு முனைவர் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கும். இதர பிற்பட்டோரில் 27 சதவீத மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி பெற்றிருக்க வேண்டும்.

எனினும், தன்பாத், தார்வார், பாலக்காடு, திருப்பதி, வாரணாசி, இந்தூர், பாட்னா, ஹைதராபாத், புவனேஸ்வர் ஆகிய ஐஐடிக்கள் தவிர மீதமுள்ள 14 ஐஐடிக்களுக்கு உரிய சதவீதத்தில் இதர பிற்பட்ட மாணவர்களுக்கான அனுமதி பெறவில்லை.

இதனால், இதர பிற்படுத்தப்பட்டோரில் 1940 மாணவர்கள் இடம் பெற வேண்டிய நிலையில் 315 பேர் குறைவாக உள்ளனர். மத்திய கல்வி அமைச்சரின் இந்த பதில் மிக அதிர்ச்சி அளிக்கிறது.

மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் அனுமதி) சட்டம் வரையறுத்துள்ள இட ஒதுக்கீடு ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. இது ஒரு ஆண்டிற்கானக் கணக்குதான்.

ஒரு ஆண்டில் மட்டும் 902 இடங்களை ஓபிசி, எஸ்சி, எஸ்டி மாணவர்கள் இழந்திருக்கிறார்கள். இழந்ததே மொத்த இடங்களில் 13 சதவீதத்தை நெருங்குகிறது.

ஓராண்டில் இவ்வளவை இழந்தால் கடந்த காலங்களில் எவ்வளவு பறி போயிருக்கும். எதிர் காலத்தில் எவ்வளவு பறி போகும்.

வேதனை அளிக்கும் நிபுணர் குழு அறிக்கை

இந்த லட்சணத்தில் மத்திய கல்வி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ராம் கோபால் ராவ் தலைமையிலான நிபுணர் குழு மாணவர் அனுமதிகளில் இட ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருப்பதுதான் வேதனையானது.

இந்த நிபுணர் குழுவானது, முனைவர் பட்ட அனுமதிகளுக்கான முன் பயிற்சிக்கு ஆய்வு உதவியாளர் என்ற கல்விப் பிரிவை அறிமுகம் செய்யலாம் என்றும், அதைப் படிப்பவர்களுக்கு முனைவர் பட்டக் கல்விக்கான அனுமதி தருவதற்கு எந்த உத்தரவாதமும் இருக்காது என்றும் பரிந்துரைத்திருந்தது.

அந்த அறிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக நிராகரிப்பதாக அறிவிக்க வேண்டும். உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அமலாவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x