பனிமூட்டத்தால் ரயில் தாமதம்; மாணவி சரியான நேரத்தில் தேர்வெழுத உதவிய வடகிழக்கு ரயில்வே நிர்வாகம்: சமூக வலைதளத்தில் குவியும் பாராட்டு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

உத்தர பிரதேச மாநிலம் மவ்மாவட்டம் மவ் பகுதியைச் சேர்ந்தவர் நசியா தபாசும். இவர் அண்மையில் ஆசிரியர் சான்றிதழ் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தார். இவருக்கான தேர்வு மையம் வாரணாசியில் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு நாளில் மவ் நகரத்தில் இருந்து வாரணாசி செல்ல நசியா தபாசும் ரயிலில் முன்பதிவு செய்திருந்தார்.

அன்று காலை 6.25 மணிக்கு மவ் ரயில் நிலையத்துக்கு சாப்ரா-வாரணாசி இன்டர்சிட்டி ரயில்வரவேண்டும். ஆனால் பனிமூட்டம்காரணம் ரயில் இரண்டரை மணிநேர தாமதமாக வந்து கொண்டிருப்பதாக நசியா தபாசும் அறிந்தார். காலை 8 மணியான பின்னரும் ரயில் வரவில்லை. பகல் 12 மணிக்கு தேர்வு தொடங்கவிருந்தது. இதனால் தான் தேர்வுக்கு சரியான நேரத்துக்குச் செல்ல முடியாது என்பதை அறிந்தநசியா தபாசும், தனது அண்ணன் அன்வர் ஜமாலுக்கு போன் செய்து விவரத்தைத் தெரிவித்தார்.

இதையடுத்து அன்வர் ஜமால்இந்த விவரத்தை தனது ட்விட்டர்பக்கத்தில் பதிவு செய்து ரயில்வேக்கு கோரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து வடகிழக்கு ரயில்வே நிர்வாகம் ஜமாலின் ட்விட்டர் பதிவைப் பார்த்துவிட்டு மாணவி நசியாவுக்கு உதவ முன்வந்தது. அதன்படி மவ் ரயில் நிலையத்துக்கு 9.18 மணிக்கு வந்தரயில் நசியாவை ஏற்றிக் கொண்டு முழு வேகத்தில் இயக்கப்பட்டு காலை 11 மணிக்கு வாரணாசிக்கு சென்றடைந்தது.

இதுகுறித்து நசியா தபாசும் கூறும்போது, “எனக்கு 12 மணிக்குதேர்வு இருந்ததால் நான் தேர்வெழுத முடியாது என்று பயந்தேன். ஆனால் எனது அண்ணன் ட்விட்டரில் பதிவு செய்ததால் வடகிழக்கு ரயில்வே நிர்வாகம் உதவி செய்தது. ரயில்வே நிர்வாகஅதிகாரிகள் எனக்கு போன் செய்துதேர்வு நேரத்துக்கு நீங்கள் சரியாக செல்ல முடியும் என்று நம்பிக்கை அளித்தனர். முழு வேகத்தில் ரயில்இயக்கப்பட்டு தேர்வு மையத்துக்கு முன்னதாகவே சென்றுவிட்டேன். வடக்கு ரயில்வே அதிகாரிகளுக்கு நன்றி” என்றார்.

அன்வர் ஜமால் கூறும்போது, “ட்விட்டரில் பதிவு செய்து ரயில்வே நிர்வாகத்திடம் உதவி கேட்டன். ட்விட்டரைப் பார்த்த 10 நிமிடத்தில் அதிகாரிகள் எனக்கு போன் செய்து உதவுவதாகத் தெரிவித்தனர். தங்கைக்கும் போன் செய்து அவருக்கு உதவி செய்வதாகத் தெரிவித்தனர். மவ் ரயில் நிலையத்துக்கு 9.18 மணிக்கு வந்த ரயில் வாரணாசிக்கு 10.57-க்குசென்றடைந்தது. முழு வேகத்தில் ரயிலை இயக்கி உதவிய ரயில்வே நிர்வாகத்துக்கு நன்றி” என்றார்.

மாணவி ஒருவருக்காக முழு வேகத்தில் ரயில் இயக்கப்பட்டு அவர் சரியான நேரத்துக்கு சென்று தேர்வெழுதிய தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வடகிழக்கு ரயில்வே நிர்வாக அதிகாரிகளுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in