

உத்தரபிரதேசத்தில் நில அபகரிப்பை தடுக்க அனைத்து சொத்துக்களுக்கும் தனித்துவ அடையாள எண் அளிக்கப்பட உள்ளது.
உத்தரபிரதேசத்தில் நில அபகரிப்பு வழக்குகள் அதிகமாகி வருகிறது. இதை சமாளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு புதிய முடிவுஎடுத்துள்ளது. இதில் அனைவருக்கும் 18 இலக்க தனித்துவ அடையாள எண் அளிக்கப்பட உள்ளது.இதன்மூலம் அரசு, தனியார் மற்றும் பொதுமக்கள் என அனைத்து வகையினரின் விவசாய நிலம்,வீட்டு நிலம் மற்றும் கட்டிடச் சொத்துக்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து உத்தரபிரதேசத் தின் வருவாய்துறை அலுவலக அதிகாரிகள் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, ‘மாநிலம் முழுவதிலும் இந்த எண் அளிக்கப்பட்ட பின்னர் தமது சொத்துகள் மீதான முழு விவரங்களையும் வீட்டில் இருந்தே இணையதளம் மூலம் கண்காணிக்கலாம். இதனால் போலி பத்திரப்பதிவுகள் முடிவிற்கு வரும். நில அபகரிப்புகளும் இல்லாமல் போகும், இப்பணியை கிராமங்களில் துவக்கி செய்து வருகிறோம்’ எனத் தெரிவித்தனர்.
புதிதாக அளிக்கப்படும் இந்த தனித்துவ இலக்கத்தின் முதல் ஆறு எண்கள் நிலம் அமைந்துள்ள மாவட்டப் பகுதியுடன் அதன் மக்கள் தொகையை குறிக்கும். 7 முதல் 10 வரையிலான எண்கள், நிலம் பிரிக்கப்பட்டதையும் அது அமைந்த வருவாய் பகுதியை 11 முதல் 14 வரையிலான எண்களிலும் குறிப்பிட உள்ளனர். மீதியுள்ள 14 மற்றும் 15 எண்களினால் அது விவசாய நிலமா? குடியிருப்பா? அரசாங்கத்திற்கானதா? வியாபாரத்துக்கா அல்லது அலுவலகமா? என்பதை குறிப்பிடும்படியும் அமைக்கப்பட உள்ளன. இதனால், நில மாஃபியாக்களின் தொழில் முடிவிற்கு வரும்என்பது முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நம்பிக்கையாக உள்ளது.
இது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டர் பதிவில், ‘புதிய பாரதத்தின் புதியஉத்தரபிரதேசத்தில் மாஃபியா களுக்கு இனி எந்த வேலையும் இல்லை. வளர்ச்சியால் ‘துப்பாக்கி கலாச்சாரம்’ முடிவு பெறும். இதில்வெற்றி அடைய உத்தரபிரதேச அரசு முழு முயற்சியுடன் பணியாற்றுகிறது. இனி உத்தரபிரதேசம் வெறும் வளர்ச்சியின் பெயரால் அடையாளம் காணப்படும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம், சுமார்ஒரு லட்சம் நிலப்பிரச்சினைகளும் முடிவிற்கு வரும் என எதிர்பார்க் கப்படுகிறது. இந்தியாவில் இதுபோல், நிலங்களுக்கு தனித்துவ அடையாள குறியீட்டு எண்களை முதன் முதலில் ஆந்திராவில் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.