

கடந்த 2020-ம் ஆண்டில் எல்லையில் பாகிஸ்தான் 5,133 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மாநிலங்களவையில் எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் சண்டை நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் கடந்த 2020-ம்ஆண்டில் 5,133 முறை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 46 பேர் இறந்தனர். பாகிஸ்தானின் அத்து மீறல்களுக்கு உரிய பதிலடி தரப்படுகிறது. மேலும் அனைத்து அத்துமீறல்களும் பாகிஸ்தான் உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஹாட்லைன்கள் மூலமும் கொடிக் கூட்டம் மற்றும் இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் இடையிலான வாராந்திர பேச்சுவார்த்தையிலும் புகார் செய்யப்படுகிறது.
சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் புனிதத்தை பாதுகாப்பதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இந்த ஆண்டு ஜனவரி 28-ம்தேதி வரை எல்லையில் 299 முறை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 2019-ம்ஆண்டில் இந்த தாக்குதல் எண்ணிக்கை 3,233 ஆக உள்ளது.
நமது பிராந்தியத்தில் கரோனா வைரஸ் பரவிவரும் வேளையிலும் எல்லையில் ஆத்திரமூட்டும் தாக்கு தல்களிலும் தீவிரவாதிகளை ஊருடுவச் செய்யும் முயற்சியிலும் பாகிஸ்தான் தீவிரம் காட்டியது. பாகிஸ்தானின் நடவடிக்கைகள் எல்லைகளில் மட்டுமே நடை பெறும் அத்துமீறல்களாக கட்டுப் படுத்தப்பட்டுள்ளன.
பிரான்ஸ் நாட்டிலிருந்து இதுவரை 11 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. வரும் மார்ச் மாதம் இதன் எண்ணிக்கை 17 ஆக உயரும். 2022 ஏப்ரல் மாதத்திற்குள் அனைத்து விமானங்களும் இந்தியா வந்துவிடும்.
சுந்திரமான, கட்டுப்பாடுகள் அற்ற இந்தோ-பசிபிக் பிராந் தியத்தை உறுதி செய்வதே, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடு களை உள்ளடக்கிய குவாட் அமைப்பின் நோக்கமாகும். குவாட் நாடுகள் இடையே எதிர்கால ராணுவஒத்துழைப்புக்கான முன்னோட்டமே மலபார் போர் பயிற்சி ஆகும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தனது பதிலில் கூறியுள்ளார்.