

ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து, நாட்டின் 29-வது மாநிலமாக தெலங்கானா திங்கள்கிழமை உதயமானது. இந்த மாநிலத்தின் முதல் முதல்வராக பதவியேற்ற சந்திரசேகர் ராவ், போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தின் முதல்வராக திங்கள்கிழமை காலை ஹைதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் பதவியேற்றார். பின்னர் அவர், போலீஸ் பயிற்சி மைதானத்தில் மாநிலம் உருவான தின விழாவில் பங்கேற்று பேசியதாவது:
ஹைதராபாத் நகரை குடிசை இல்லாத நகராக மாற்ற நடவடிக்கை எடுப்பேன். சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தொழில்வளம் பெருக பல திட்டங்கள் கொண்டு வரப்படும். போலீஸ் துறையில் காலி பணியிடங்கள் நிரப்ப போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். போக்குவரத்து போலீஸாருக்கு மருத்துவ அகவிலைப்படி வழங்கப்படும்.
தெலங்கானா அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஏற்பாடு செய்யப்படும். மத்திய அரசு ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்கப்படும். முதியோர், பீடி தொழிலாளர்கள், விதவைகளுக்கு ரூ. 1000, மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 1,500 மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் கட்டித் தரப்படும். விவசாயத்திற்கு தினமும் 8 மணி நேர இலவச மின்சாரம் வழங்க ஏற்படு செய்யப்படும்.
விவசாய வங்கி கடன் பெற்றுள்ளோருக்கு தலா ரூ. 1 லட்சம் கடன் தொகை ரத்து செய்யப்படும். இந்திய வரலாற்றில் தெலங்கானா போராட்டம் நிரந்தரமாக இடம் பெறும். மக்கள் நலனே முக்கியமான குறிக்கோளாக தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி செயல்படும்.
இவ்வாறு முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறினார்.
பின்னர், தலைமைச் செயலகத்திற்கு சென்று, தெலங்கானா அரசு முத்திரை அங்கீகார கோப்பில் சந்திரசேகர ராவ் கையொப்பமிட்டார். இதனை தொடர்ந்து முதன் முறையாக அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.
தெலங்கானா மக்கள் தொகை 3.5 கோடி
நமது நாட்டின் 29-வது மாநிலமாக ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து 10 மாவட்டங்கள் கொண்ட தெலங்கானா மாநிலம் திங்கட்கிழமை உருவானது. தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சித் தலைவர் கே.சந்திரசேகர் ராவ் இம்மாநிலத்தின் முதல், முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.
10 மாவட்டங்கள்
ஹைதராபாத், ஆதிலாபாத், கம்மம், கரீம் நகர், மஹபூப் நகர், மேதக், நலகொண்டா, நிஜாமா பாத், ரங்காரெட்டி, வாரங்கல்
பரப்பளவு
மாநிலத்தின் மொத்த பரப்பளவு 1.14 லட்சம் சதுர கி.மீட்டர்கள் ஆகும். நாட்டின் 13-வது பெரிய மாநிலமாகும்.
மக்கள் தொகை
கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தெலங்கானா மக்கள் தொகை 3.52 கோடியாகும்.
சாதக அம்சங்கள்
தெலங்கானாவில் அதிக அளவில் வனப்பகுதி உள்ளது. கிருஷ்ணா நதி நீரில் சுமார் 68 சதவீதம் தெலங்கானாவுக்கு பயன்படுகிறது. இதேபோல் கோதாவரி நதியின் 70 சதவீத நீர் இங்கு உபயோகப்படுத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த ஆந்திராவின் வனப்பகுதியில் 45 சதவீதம் தெலங்கானாவில் உள்ளது. இதன் தலைநகரான ஹைதராபாத், தொழில், கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய அனைத்திலும் வளர்ச்சி அடைந்த நகரமாகும்.
பாதகமான அம்சங்கள்
தெலங்கானா பகுதியில் விளைச்சல் காணாத பொட்டல் நிலம் அதிகமாக உள்ளது. மேலும் இம்மாநிலத்தில் நக்சலைட்டுகளின் நடமாட்டமும் அதிகம். இதனால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அடிக்கடி ஏற்படும் நிலை. மின் உற்பத்தி குறைவாக உள்ளது.