

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் இயற்றுதலில் ஒருபக்க முடிவு எடுத்திருக்கக் கூடாது என துவாரகா மற்றும் புரி சங்கராச்சாரியர்கள் கருத்து கூறியுள்ளனர். இதில் விவசாயிகளிடம் அரசு கலந்தாலோசிக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் அலகாபாத்தின் கும்பமேளாவில் கூடியிருக்கும் சங்கராச்சாரியர்கள் இதன் மீது கருத்து கூறியுள்ளனர்.
இதுகுறித்து குஜராத் துவாரகாவின் சாரதா பீடத்தின் சுவாமி சொரூபாணந்த் சரஸ்வதி கூறும்போது, ‘‘2016 -இல் அமலான பணமதிப்பு நீக்கம் மற்றும் வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் மத்திய அரசு ஒருபக்க முடிவை எடுத்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பழக்கமாகி விட்ட இந்த ஒருதலைப்பட்சம் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது.’’ எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மற்றொரு சங்கராச்சாரியரான ஒடிசா புரியின் கோவர்தன் பீடத்தின் சுவாமி நிஷ்சாலாணந்த் சரஸ்வதி கூறும்போது, ‘‘பொதுமக்களின் முக்கியமானவர்களாக விவசாயிகளின் கருத்துக்களையும் வேளாண் சட்டங்களில் சேர்த்திருக்க வேண்டும்.
இனியாவது விவசாயிகளிடம் பேசி அவர்கள் கருத்து சேர்க்கப்படும் என நம்பலாம். நாட்டின் விவசாயிகள் இவ்வளவு நாட்களாகப் போராடுவது சரியல்ல.’’ எனத் தெரிவித்தார்.
இந்துமதப் பாதுகாப்பிற்காக ஆலோசனைகள் வழங்க ஆதி சங்கராச்சாரியரால் நாட்டின் நான்கு திசைகளில் மடங்கள் அமைக்கப்பட்டன. இதன் தலைவர்கள், சங்கராச்சாரியர்கள் என்றழைக்கப்பட்டனர்.
வழக்கமாக இந்துமத விவகாரங்களில் மட்டுமே இந்த சங்கராச்சாரியர்கள் கருத்து மற்றும் ஆலோசனைகள் கூறுவது வழக்கம். மற்ற விவகாரங்களில் பெரும்பாலும் தலையிடாத இந்த சங்கராச்சாரியர்களில் இருவர் அரசியல் விவகாரத்தில் கருத்து கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.