

பிஹார் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மாட்டிறைச்சி தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள விளம்பரத்துக்கு மற்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
பிஹார் சட்டப்பேரவைக்கு இது வரை 4 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. 5-வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் இன்று 57 தொகுதி களில் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் மெகா கூட்டணி வைத்து போட்டியிடு கின்றன. எதிர்தரப்பில் பாஜக, ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி மற்றும் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியின் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும், பசுவதையை தடுக்க வேண்டும் என்று வட மாநிலங் களில் போராட்டங்கள் நடந்தன. மாட்டிறைச்சி தொடர்பாக சில அசம் பாவித சம்பவங்களும் நடந்தன. இந்தச் சூழ்நிலையில், பிஹார் தேர்தல் பிரச்சாரத்திலும், மாட் டிறைச்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
‘இந்துக்களும் மாட்டிறைச்சி உண்கின்றனர்’ என்று லாலு பிரசாத் கருத்து தெரிவித்தார்.
‘ஞானிகளும் மாட்டிறைச்சி உண்டதாக வேதங்கள், புராணங் களில் எழுதப்பட்டுள்ளது’ என்று ராஷ்டிரிய ஜனதா தள துணை தலைவர் ரகுவன்ஷ் பிரசாத் சிங் விமர்சனம் செய்தார்.
‘நான் மாட்டிறைச்சி உண்ண நினைத்தால், அதை யாராலும் தடுக்க முடியாது’ என்று கர்நாடக மாநில காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்.
இந்நிலையில், இவர்கள் 3 பேரின் கருத்தையும் மேற்கோள் காட்டி பிஹார் மாநில பத்திரிகை களில் பாஜக நேற்று விளம்பரம் வெளியிட்டது. மேலும், ஐஜத கூட்டணியில் உள்ள நண்பர்கள் லாலு, ரகுவன்ஷ், காங்கிரஸ் ஆகி யோரின் கருத்துகளை நிதிஷ் குமார் ஏற்றுக் கொள்கிறாரா? இதற்கு நிதிஷ் பதில் சொல்லியே ஆக வேண்டும். ‘பதில் இல்லாவிட்டால், ஓட்டு இல்லை’ (ஜவாப் நஹி, வோட் நஹி). ஓட்டுக்காக அரசியல் நடத்துவதை நிதிஷ் குமார் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று விளம் பரத்தில் பாஜக கூறியுள்ளது.
இந்த விளம்பரம் 5-வது கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் விநியோகிக்கப்பட்ட பத்திரிகை களில் வெளியாகி இருந்தது. இந்த விளம்பரத்துக்கு ஐஜத, ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக.வின் விளம்பரம் தேர்தல் நடத்தை விதிமீறிய செயலாகும். எனவே பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஐஜத கூட்டணியினர் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆர்.லட்சுமணன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘விளம்பரம் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விளக்கம் கேட்டு அறிக்கை பெறுவோம். அதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்று ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.
இதுகுறித்து ஐஜத பொதுச் செயலாளர் கே.சி.தியாகி நேற்று கூறுகையில், ‘‘ஐஜத, ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சி பிரநிதிகள் நாளை (இன்று) டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து பாஜக விளம்பரம் குறித்து புகார் மனு அளிக்க உள்ளனர். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க தவறினால், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் புகார் தெரிவிப்போம்’’ என்றார். பாஜக விளம்பரத்துக்கு இடதுசாரி கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.