Published : 08 Feb 2021 03:09 AM
Last Updated : 08 Feb 2021 03:09 AM

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத சுகாதார ஊழியர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு ஊதியம் கிடையாது: ஒடிசாவின் கட்டாக் மாவட்ட நிர்வாகம் உத்தரவு

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என ஒடிசாவின் கட்டாக்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் 16-ம் தேதி கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதனிடையே தடுப்பூசிகளை செலுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது. இதன் காரணமாக, பெரும்பாலானோர் இந்த தடுப்புமருந்துகளை தவிர்த்து வருகின்றனர். இதுதொடர்பாக மக்களிடம் இருக்கும் பயத்தை போக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, ஒடிசாவில் பல சுகாதாரப் பணியாளர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெயரை பதிவு செய்வதுடன் நிறுத்திக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கட்டாக் நகராட்சி ஆணையர், எஸ்சிபி அரசுமருத்துவக் கல்லூரியின் டீன் உள்ளிட்டோருக்கு அம்மாவட்ட ஆட்சியர் பவானி சாகர் சயானி நேற்று ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “கரோனா தடுப்பூசிகளுக்காக பெயரை பதிவு செய்துள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் வரும் 12-ம் தேதிக்குள் அவற்றை செலுத்திக் கொள்ள வேண்டும். தவறினால் அவர்களின் ஊதியத்தை பிடித்துக் கொள்ள வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்டாக் ஆட்சியர் பவானி சாகர் சயானி கூறும்போது, “பதிவு செய்யப்படும் நபர்களுக்கு ஏற்ப கரோனா தடுப்பூசிகள் பெறப்படுகின்றன. ஒரு வயாலில் (மருந்துக் குடுவை) இருக்கும் மருந்தை 6 நபர்களுக்கு செலுத்தலாம். ஆனால், பதிவு செய்த நபர்கள் வரவில்லை எனில், அந்தமருந்து வீணாகிவிடும். இதைத் தடுக்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

தமிழகத்தில் 1.7 லட்சம் பேர்

தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த மாதம் 16-ம்தேதி முதல் முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும், அடுத்தக்கட்டமாக காவல், உள்ளாட்சி என பல்வேறு துறைகளின் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

முன்களப் பணியாளர்கள் அவர்களுக்கான தேதியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால், மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்னுரிமை வழங்கப்படாது. விருப்பமுள்ளவர்கள் தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். கட்டாயம் இல்லை.

ஆனாலும், தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. தமிழகத்தில் இதுவரை 1.7 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினா்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x