

ஒடிசாவில் பொறியியல் படிப் பில் சேருவதற்காக கூலி வேலைசெய்து வந்த பழங்குடியின மாணவி ஒருவருக்கு திமுக எம்.பி. செந்தில்குமார் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.
ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் திளங்கா தாலுகாவில் உள்ளது கோராடிப்பிடா கிராமம். இங்கு கூலி வேலை செய்து பிழைக்கும் குடும்பத்தைச் சேர்ந்தவர் லோஜி பெஹரா எனும் மாணவி. பழங்குடி யின சமூகத்தைச் சேர்ந்தஇவர், டிப்ளமோ முடித்து பொறியியல் உயர் கல்வி பயில விரும்பியுள்ளார். ஆனால், அதற்கான பணம் அவரிடம் இல்லை.
இதன் காரணமாக, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் சுமார் ஒரு மாதமாக, லோஜி பெஹரா மண் அள்ளும் வேலை செய்து வருகிறார். இதில் அவருக்கு அன்றாடம் கூலியாக கிடைத்த ரூ.207 தொகையை சேமித்து வந்துள்ளார்.
இந்த தகவலானது கடந்த ஜனவரி 25-ல் ‘தி இந்து’ ஆங்கிலநாளேட்டில் வெளியாகி சமூகவலைதளங்களிலும் வைரலானது. இதனை அறிந்த தர்மபுரி தொகுதிதிமுக எம்.பி. எஸ்.செந்தில்குமார், அந்த மாணவிக்கு உதவ முடிவுசெய்தார். இதையடுத்து, டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஒடிசா சென்ற அவர், அங்கிருந்து காரில் புரி மாவட்டத்தில் உள்ள அப்மாணவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அவரிடம் தனது சொந்தப் பணம் ரூ.1 லட்சம் அளித்து அதை கல்விக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் திமுக எம்.பி. செந்தில்குமார் கூறும்போது, "லோஜி பெஹராவின் இளைய சகோதரிகள் நால்வரும் படிக்க வேண்டி அவர்களின் தாய், தந்தை இருவரும் கூலி வேலை செய்கிறார்கள். மாணவி படித்து முன்னேறுவதன் மூலம் அந்தக் குடும்பமே பலன் அடையும் என்பதால் உதவ முடிவு செய்தேன். பணம் இல்லாத காரணத்தால் ஏழை மாணவியின் கல்வி பாதிக்கக் கூடாது. இதனைக் கருத்தில்கொண்டே இந்த உதவியை செய்தேன்" என்றார்.
இதனிடையே, லோஜி பெஹராவுக்கு உதவ திமுக எம்.பி. செந்தில்குமார் முன்வந்ததை கேள்விப்பட்ட அக்கிராமத்தின் தலைவர் நேரில் வந்து அவரை சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார். இதுபோல வெளிமாநில எம்.பி.க்கள் ஒடிசா வந்து உதவுவது முதன்முறை எனவும் பாராட்டியுள்ளார். செந்தில் குமார் செய்த இந்த உதவி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதை அறிந்து மேலும் பலர் அப்பெண்ணுக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளனர்.