தாவூத்தை தொடர்ந்து எதிர்ப்பேன்: போலீஸில் சோட்டா ராஜன் தகவல்

தாவூத்தை தொடர்ந்து எதிர்ப்பேன்: போலீஸில் சோட்டா ராஜன் தகவல்
Updated on
1 min read

இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்டர்போல் போலீஸாரால் கைது செய்யப்பட்ட சோட்டா ராஜனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்தியாவில் இருந்து வந்துள்ள சிபிஐ அதிகாரிகள், மும்பை மற்றும் டெல்லி போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர்.

அப்போது, ‘‘தாவூத் இப்ராஹிமுக்கு எதிராக போராடி வந்தேன். இனிமேலும் அவருக்கு எதிராக செயல்படுவேன்’’ என்று போலீஸாரிடம் சோட்டா ராஜன் கூறியிருக்கிறார்.

தாவூத்தின் நம்பிக்கைக்குரிய கூட்டாளியாக இருந்தவர் சோட்டா ராஜன். கடந்த 1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பிறகு தாவூத்தைபிரிந்து சோட்டா ராஜன் தனியாக செயல்பட தொடங்கினார். இதற்கிடையில், சோட்டா ராஜன் இந்தியாவை சேர்ந்தவர் என்றும் அவர் மீது பல வழக்குகள் உள்ளதால் தங்களிடம் ஒப்படைக்கும்படியும் இந்தோ னேசிய அரசிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. மேலும், அவரை அழைத்து வர சிபிஐ அதி காரிகள் பாலியில் முகாமிட் டுள்ளனர்.

முன்னதாக ஜாகர்தாவில் உள்ள காவல் மையத்தில் இந்திய தூதரகத்தில் முதன்மை செயலர் (தூதரகம்) சஞ்சீவ் குமார் அகர்வால், சோட்டா ராஜனிடம் விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவுக்கான இந்திய தூதர் குர்ஜித் சிங் கூறுகையில், ‘‘சோட்டா ராஜனை இந்தியாவிடம் ஒப்படைப்பதற்கான நடைமுறைகள் தொடங்கி விட்டன. ஆனால், எப்போது ஒப்படைக்கப்படுவார் என்பதை கூற இயலாது’’ என்றார்.

இதற்கிடையில், தனக்கு ஆதர வாக வாதாட பிரான்சிகோ பிரசார் என்ற வழக்கறிஞரை சோட்டா ராஜன் நியமித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in