Published : 29 Nov 2015 11:55 AM
Last Updated : 29 Nov 2015 11:55 AM
மகாராஷ்டிராவில் ரயிலில் தனியாக பயணம் செய்த பெண் பயணிக்கு ஒருவர் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்தப் பெண் ‘ட்விட்டரில்’ உதவி கோரியதையடுத்து, ரயில்வே அமைச்சர் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவருக்கு உதவி உள்ளனர்.
இதுகுறித்து மத்திய ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நரேந்திர பாட்டீல் நேற்று கூறியதாவது:
நம்ரதா மகாஜன் என்ற பெண் வியாழக்கிழமை வெளியூர் செல்லும் ரயிலில் பயணம் செய்துள்ளார். அவர் ஷெகான் ரயில் நிலையம் வழியாக சென்றபோது, மாலை 6.59 மணிக்கு ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவின் ‘ட்விட்டர்’ பக்கத்தில் (@RailMinIndia) ஒரு தகவலை பதிவு செய்துள்ளார்.
அதில், “நான் 18030 என்ற ரயிலில் பயணம் செய்கிறேன். நான் இருக்கும் பெட்டியில் ஒரே ஒரு ஆண் மட்டும் என்னுடன் இருக்கிறார். அவர் என்னை தொந்தரவு செய்கிறார். அவரது நடத்தை சரியாக இல்லை. தயவுசெய்து எனக்கு உதவவும்” என கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து எங்களுக்கு தகவல் கிடைத்ததும் ஷெகான் ரயில் நிலையத்துக்கு அடுத்த புசாவல் ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரி வேத் பிரகாஷுக்கு தகவல் தெரிவித்தோம்.
ஆனால் அந்தப் பெண் தான் பயணம் செய்யும் ரயில் பற்றிய முழு விவரங்களை தெரிவிக்கவில்லை. எனவே, முழு விவரங்களையும் தெரிவிக்குமாறு அந்தப் பெண்ணுக்கு ‘ட்விட்டரில்’ கேட்டுக் கொண்டோம். மேலும் பாதுகாவல் உதவி எண்ணை (182) தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தினோம்.
இதையடுத்து அந்தப் பெண் தான் பயணம் செய்யும் ரயில் குறித்த முழு விவரங்களை தெரிவித்தார். இந்நிலையில் அந்தப் பெண் புகார் செய்த 40 நிமிடங்களில் அந்த ரயில் புசாவல் ரயில் நிலையத்தை அடைந்தது.
உடனடியாக, அந்தப் பெண் பயணம் செய்த பெட்டிக்குச் சென்ற ரயில்வே பாதுகாப்புப் படையினர், அதில் பயணம் செய்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் உரிய டிக்கெட் வைத்திருந்ததால் அவரை வேறு பெட்டியில் பயணிக்குமாறு உத்தரவிட்டனர். நம்ரதாவையும் வேறு பெட்டியில் பயணிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இதையடுத்து, நம்ரதா மகாஜன் ‘ட்விட்டரில்’ ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!