‘நான் பரம்பரைச் சொத்தை விற்கவில்லை’: எதிர்க்கட்சிகள் விமர்சனத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி: நிதியமைச்சருக்கு காங். கறுப்புக்கொடி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் : கோப்புப்படம்
Updated on
1 min read

நான் பரம்பரைச் சொத்தை விற்பனை செய்கிறேன் எனும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மறுக்கிறேன். அரசு நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதில் அரசு தெளிவான மனநிலையுடன் செயல்படுகிறது. வரிசெலுத்துவோர் பணம் புத்திசாலித்தனமாக செலவு செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பட்ஜெட் தொடர்பாக முக்கிய விஐபிக்கள், தொழிலதிபர்கள், வர்த்தகர்கள் ஆகியோருடன் விவாதிக்க மும்பைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வருகை தந்தார். மும்பை தாதர் பகுதியில் உள்ள யோகி சபா கிராஹாவில் இந்த நிகழ்ச்சி நடந்த நடந்தது.

விமானநிலையத்திலிருந்து மும்பை தாதர் பகுதிக்கு நிர்மலா சீதாராமன் வரும்போது, சாலையில் காங்கிரஸ் தொண்டர்கள் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளதற்கு எதிராக இந்த ஆர்பாட்டத்தை காங்கிரஸார் நடத்தினர்.

இந்த பட்ஜெட் விவாத நிகழ்ச்சிக்குப்பின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

மும்பையில் இன்று பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன்
மும்பையில் இன்று பேட்டி அளித்த நிர்மலா சீதாராமன்

நான் பட்ஜெட்டில் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்யப் போகிறேன் என்றதும் பரம்பரை சொத்தை விற்பனை செய்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகிறார்கள்.

மத்திய அரசைப் பொருத்தவரை சிலஅரசுத் துறைகள் சிறப்பாக செயல்பட வேண்டும் என விரும்புகிறது. அதுமட்டுமல்லாமல் வரிசெலுத்துவோர் பணம் புத்திசாலித்தனமாக செலவு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுவது போல் பரம்பரைச் சொத்துக்களை எதையும் அரசு விற்கவில்லை. அப்படிக் கிடையவே கிடையாது. இது மாற்றத்துக்கான பட்ஜெட். மாற்றத்துக்கான மனநிலையுடன் நம்பிக்கை வைக்க வேண்டும்.நாட்டின் ஜிஎஸ்டி வருவாய் கடந்த 3 மாதங்களாக உயர்ந்து வருகிறது. தொழில்நுட்ப உதவியுடன் தவறுகள் தடுக்கப்பட்டு வருகின்றன.

பரம்பரைச் சொத்துக்களை மத்தியஅரசு விற்கவில்லை. அதை வலிமைப் படுத்துகிறோம். பரம்பரைச் சொத்துக்கள்தான் நமது பலம். பல பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படமுடியாமல் தவிக்கின்றன.

சில நிறுவனங்கள் சிறப்பாகச் செயல்பட்டும் போதுமான கவனத்தைப் பெறவில்லை. இந்தக் கொள்கை மூலம் அந்தநிறுவனங்களை செயல்பட வைக்கும்.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in