பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியைப் புறக்கணிக்க மேற்குவங்க முதல்வர் மம்தா முடிவு?

மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி : கோப்புப்படம்
மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி : கோப்புப்படம்
Updated on
1 min read

மேற்கு வங்கத்தில் மிட்னாப்பூர் மாவட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்காமல் புறக்கணிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

புர்பா மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள ஹால்தியா நகருக்கு இன்று பிரதமர் மோடி செல்லவுள்ளார். ஹால்தியா நகரில் அமைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலை உள்ளிட்ட 4 கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இன்று மாலை 7 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்பார் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கமாட்டார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான காரணம் குறித்து ஏதும் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

ஆனால், கடந்த மாதம் 23-ம் தேதி கொல்கத்தாவில் நடந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜி பங்கேற்றபோது அவருக்கு அவமரியாதை நடந்தது. முதல்வர் மம்தா பானர்ஜி பேச எழுந்தபோது, அவரை நோக்கி ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி சிலர் இடையூறு செய்தனர்.

இதனால் கோபமடைந்த மம்தா பானர்ஜி, அது அரசின் சார்பில் நடக்கும் நிகழ்ச்சி, ஒரு கட்சியின் சார்பில் நடக்கும் நிகழ்ச்சியல்ல. என்னை அழைத்துவந்து அவமானப்படுத்துவது ஏற்கமுடியாதது எனத் தெரிவித்து பேச மறுத்து அமர்ந்துவிட்டார்.

இந்த சம்பவத்தால் மிகவும் அதிருப்தி அடைந்திருக்கும் மம்தா பானர்ஜி, இன்று பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் புறக்கணிக்க வாய்ப்புள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியைப் புறக்கணிக்கக் கோரி முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக்கொள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in