Last Updated : 07 Feb, 2021 10:31 AM

 

Published : 07 Feb 2021 10:31 AM
Last Updated : 07 Feb 2021 10:31 AM

உழைத்து கவுரவமாக வாழ பிச்சைக்காரர்களுக்கு சுயதொழில் பயிற்சி: ராஜஸ்தான் அரசு புதிய முயற்சி 


பிச்சை எடுப்பவர்களும் உழைத்து கவுரவமாக வாழ்வதற்காக அவர்களுக்கு சுய தொழில் கற்றுக்கொடுத்து வாழ வழிகாட்டும் திட்டத்தை ராஜஸ்தான் அரசு தொடங்கியுள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார். பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தில், முதல் கட்டமாக 40-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அழைத்துவரப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

ஜெய்ப்பூரில் உள்ள பிச்சைக்காரர்கள் புனர்வாழ்வு முகாமில், ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கழகத்தின் சார்பில் இந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

உத்தரகாண்ட், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகியமாநிலங்களில் இருந்து பிழைக்க வழிதெரியாமல் ஜெய்ப்பூரில் பிச்சை எடுத்து வந்த 40-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அழைத்துவரப்பட்டனர். அவர்களுக்கு உடை, தங்குமிடம், உணவு வழங்கப்பட்டது.

அவர்களுக்கு யோகா கலை, விளையாட்டு, தியானம், கணினி பயிற்சி போன்றவை கற்றுக்கொடுக்கப்பட்டது. முதல் கட்டமாக பயிற்சி பெறுவோர் பெரும்பாலும் சமையல் கலை குறித்த சுயதொழிலில் பயிற்சி அளிக்கப்பட்டது.

ராஜஸ்தான் திறன் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டு கழகத்தின் தலைவர் நீரஜ் கே பவான் கூறுகையில் “ காவல்துறை, சமூக நீதித்துறை ஆகியோரின் முயற்சியால் 1,100 பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி, சுயதொழில், உளவியல் சிகிச்சை, கவுன்சிலிங் போன்றவை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் முதல்கட்டமாக 40-க்கும் மேற்பட்டவர்களுக்கு சுயதொழில் பயிற்சி முடிந்துள்ளது. இவர்களுக்கு சமையல் தொழில், ப்ளெம்பிங், எலெக்ட்ரீஸியன், அழகுக் கலை பயிற்சி, பாதுகாவலர்கள் பயிற்சி போன்றவை வழங்கப்பட்டுள்ளது.

இனிமேல் இவர்கள் பிச்சை எடுக்காமல், சுயமாக உழைத்து குடும்பத்தைப் காப்பாற்றும் திறன் உள்ளவர்களாக இருப்பார்கள். இந்தத் திட்டம் அடுத்தடுத்த மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்” எனத் தெரிவித்தார்.

முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், “ மாநிலத்தில் இனிவரும் காலங்களில் பிச்சைக்காரர்கள் இல்லாமல் செய்யப்படும். ஆதரவற்றோர்களுக்கு மறுவாழ்வு இல்லம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x