Last Updated : 07 Feb, 2021 08:41 AM

 

Published : 07 Feb 2021 08:41 AM
Last Updated : 07 Feb 2021 08:41 AM

விவசாயிகள் போராட்டம் பற்றி பேசும்போது எச்சரிக்கையாக பேசுங்க: சச்சினுக்கு சரத் பவார் அறிவுரை

புனேயில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பேட்டி அளித்த காட்சி : படம் ஏஎன்ஐ

புனே


விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி சச்சின் டெண்டுல்கர் பேசும்போது எச்சரிக்கையாக கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அறிவுறுத்தியுள்ளார்.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியின் பல எல்லைகளில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். விவசாயிகளின் போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது. சமீபத்தில், அமெரிக்க பாப் பாடகி ரிஹானா இந்தியாவில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவாக டிவிட் செய்தார். இதற்கு பதிலடியாக பல்வேறு கிரிக்கெட் நட்சத்திரங்கள் டிவிட்டரில் கருத்து தெரிவித்தனர்.

குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் டிவிட்டரில், “இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்ய முடியாது. வெளிப்புற சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாம் ஆனால் பங்கேற்பாளர்கள் அல்ல. இந்தியர்களுக்குதான் இந்தியா தெரியும், இந்தியாவுக்காக முடிவு செய்ய வேண்டும், ஒரு தேசமாக ஒற்றுமையாக இருக்கும்” என்று பதிவு செய்து இருந்தார்.

சச்சின் இந்த டிவிட்டுக்கு நெட்டிஸன்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. கிரிக்கெட்டின் கடவுள் என கொண்டாடப்பட்ட சச்சின், ஒரு ட்விட்டால், கீழே போட்டு மதிக்கப்படும் அளவுக்கு மோசமாக விமர்சித்தனர். சச்சின் ட்விட் மட்டும்ஒரு லட்சத்துக்கும் அதிகமாக ரீடிவிட் செய்யப்பட்டது.

இந்த சூழ்நிலையில் சச்சின் விவகாரம் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் புனேயில் நேற்று நிருபர்களுக்குப் பேட்ட அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “விவசாயிகள் எடுத்துள்ள நிலைப்பாடு பற்றி பல பிரபலங்கள் விமர்சிக்கிறார்கள். சச்சின் டெண்டுல்கருக்கு என்னுடைய ஆலோசனை என்னவென்றால், வேறு துறையை பற்றி அவர் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை தெரிவிக்கிறேன்.

டெல்லி எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளை அவமானப்படுத்தும் நோக்கில் அவர்களைத் தீவிரவாதிகள் என்றும், காலிஸ்தானிகள் என்றும்கூறுகிறது. நமக்கு சாப்பாடு போடும் விவசாயிகளை இவ்வாறு புண்படுத்துவது சரியான நடைமுறை அல்ல.

பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சர் மற்றும் நிதின் கட்கரி போன்ற அரசாங்கத்தின் மூத்த தலைவர்கள் முன்வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேசினால் ஒரு தீர்வை காணலாம். அதேசமயம் மூத்த தலைவர்கள் முயற்சி மேற்கொண்டால், விவசாயிகளும் அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டியது அவசியம்

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்துஎனக்குத் தெரிந்து, போராட்டக்காரர்களைத் தடுக்க சாலையில் ஆணிகளை அறைந்து தடுக்கும் முறையை நான் கண்டதில்லை. முதலில் இந்தியாவில் உள்ளமக்கள் மட்டும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்கள். இப்போது, இந்தியாவுக்கு வெளியே இருக்கும் மக்களும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆதலால், மத்திய அரசு தன்னை சுயபரிசோதனை செய்ய வேண்டும்

இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x